சென்னை : வீட்டுவசதி வாரிய நிலத்தை, முன்னாள் முதல்வரின் பாதுகாவலருக்கு முறைகேடாக ஒதுக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் பெரியசாமியை விடுவித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த, 2006 -11ம் ஆண்டில், தி.மு.க., அமைச்சரவையில், வீட்டுவசதித் துறை அமைச்சராக ஐ.பெரியசாமி பதவி வகித்தார். அரசு விருப்ப ஒதுக்கீட்டின் கீழ், முகப்பேர் ஏரி திட்டத்தின் கீழ் உள்ள வீட்டுவசதி வாரிய நிலத்தை, அப்போதைய முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்ற அதிகாரிக்கு ஒதுக்கியதில், முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது.
ஆட்சி மாறியதும், பெரியசாமி, கணேசன் உள்ளிட்டோருக்கு எதிராக, 2012ல் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.இந்த வழக்கு, சென்னையில் உள்ள எம்.பி., -- எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற விசாரணையில் இருந்தது. வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, சிறப்பு நீதிமன்றத்தில், அமைச்சர் பெரியசாமி மனுத் தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த, நீதிபதி ஜி.ஜெயவேல் பிறப்பித்த உத்தரவு:
ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர, கவர்னர் அனுமதி அளித்ததை எதிர்த்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கை, விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், வழக்கு தொடர ஒப்புதல் அளிக்க, கவர்னருக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவித்துள்ளது.
முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு தொடர, கவர்னர் ஒப்புதல் அளிக்கலாம் என, உச்ச நீதிமன்றமும் தெரிவித்துள்ளது.
ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு ஒப்புதல் அளிக்க, கவர்னரால் மட்டுமே முடியும்; சபாநாயகரால் அல்ல. வழக்கு விசாரணை துவங்கிய பின், இந்த மனு விசாரணைக்கு ஏற்புடையதல்ல என்ற வாதத்தை ஏற்க முடியாது.
பெரியசாமிக்கு எதிராக வழக்கு தொடர, அப்போதைய சபாநாயகர் ஒப்புதல் அளித்தது, சட்டப்படி செல்லாது. அனைத்து அம்சங்களையும் அவர் பரிசீலித்தாரா என்ற கேள்வியை ஆராய விரும்பவில்லை. சட்டப்படி முறையான ஒப்புதல் இல்லாததால், இந்த வழக்கில் இருந்து பெரியசாமி மட்டும் விடுவிக்கப்படுகிறார்.
இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Advertisement