கன்னியாகுமரி : கன்னியாகுமரி வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் செய்தார். ஒன்றரை மணி நேரம் அங்கு சுற்றிப்பார்த்த ஜனாதிபதி, பின், திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒரு நாள் பயணமாக நேற்று கன்னியாகுமரி வந்தார். திருவனந்தபுரத்தில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டரில் வந்த ஜனாதிபதி, காலை 9:00 மணிக்கு, கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை மைதானத்தில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கினார்.
அவரை, தமிழக கவர்னர் ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து, அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி, பின்னர் காரில் கன்னியாகுமரி பூம்புகார் படகுத்துறை சென்றார். அங்கிருந்து, கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு தனிப்படகில் புறப்பட்டார்.
விவேகானந்தர் பாறையில் வந்திறங்கிய ஜனாதிபதி, பேட்டரி காரில் நினைவு மண்டபம் மேல் பகுதிக்கு சென்றார். அவருடன் கவர்னர் ரவி அமர்ந்திருந்தார்.
நினைவு மண்டபத்தை சுற்றிப் பார்த்த ஜனாதிபதி, தியான மண்டபத்தில் தனியாக அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்தார். அதே போல், பகவதி அம்மன் கால் பாதம் பதிந்த மண்டபத்தில், அம்மனின் கால் பாதத்தை வணங்கினார். பின்னர் விவேகானந்தர் நினைவு மண்டபம் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அப்போது, தமிழக போலீஸ் டி.ஜி.பி., சைலேந்திரபாபு, குமரி மாவட்ட கண்காணிப்பாளர் ஜோதி நிர்மலா ஆகியோர் உடன் இருந்தனர்.தொடர்ந்து பேட்டரி காரில் மண்டப கீழ் தளம் வந்த ஜனாதிபதி, படகில் கரைக்கு திரும்பினார். பின்னர் காரில் விவேகானந்த கேந்திரம் சென்று அங்குள்ள ராமாயண தரிசன கண்காட்சி கூடம் மற்றும் பாரத மாதா கோவிலை பார்வையிட்டார்.
பின்னர், அங்கிருந்து அரசு விருந்தினர் மாளிகை வந்த ஜனாதிபதி, காலை, 10:50 மணிக்கு ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றார்.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரி முழுதும் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முக்கடல் சங்கமம் கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.