தஞ்சாவூர் : தஞ்சாவூர் அருகே, சர்க்கரை நோய் பாதிப்பால் அவதிப்பட்ட கணவன், மனைவி இருவரும் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றனர். அதில், கணவன் மட்டும் உயிரிழந்தார். மனைவிக்கு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே, காருகுடியை சேர்ந்தவர் சந்தானம்,40. அவருக்கு திருமணமாகி கற்பகம்,31, என்ற மனைவியும், ஈஸ்வரி,15, என்ற மகளும், முகேஷ்,13, என்ற மகனும் உள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்க்கரை நோயால் அவதிப்பட்ட சந்தானத்துக்கு, இடது கால் விரல் அகற்றப்பட்டது. காயம் ஆறாமல், முழங்கால் வரை அழுகியதால், துாக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தார். கணவன் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், மனைவி கற்பகமும் உடல் நலம் பாதிக்கப்பட்டார்.
இதனால், விரக்தியடைந்த இருவரும், நேற்று மதியம், ஒரே சேலையில் துாக்கு மாட்டிக்கொண்டனர். இதை பார்த்த அவரது மகள் ஈஸ்வரி, சத்தம் போட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் வந்து, இருவரையும் மீட்டு, திருவையாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த போது, சந்தானம் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கற்பகம், தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து, திருவையாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.