கோவை : 'ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் கட்சி நிதி வசூலிப்பதை நிறுத்தச் சொல்லுங்கள்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, கோவையில் இருந்து கடிதம் எழுதப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில், 10 ஆண்டுகள் கவுன்சிலராக இருந்த ம.தி.மு.க,,வை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர், முதல்வர் ஸ்டாலினுக்கு, மனவேதனையுடன் மூன்று பக்க கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
எந்த அரசு துறைக்குச் சென்றாலும், கட்சி நிதி கேட்கின்றனர். கட்டட வரைபட அனுமதி வாங்க, சொத்து வரி நிர்ணயிக்க, பத்திரப்பதிவு செய்ய, கனிம வளங்கள் எடுத்துச் செல்ல, மின் இணைப்பு பெற, அரசு அதிகாரிகள், அலுவலர்கள் இடமாற்றம் செய்வதற்கு கூட கட்சி நிதி கேட்கின்றனர். அனைத்து அரசு துறைகளிலும் கட்சி நிதி வசூலிக்க ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாநகராட்சியில், மேயருக்கும், கவுன்சிலர்களுக்கும் ஒருங்கிணைப்பில்லை; மேயருக்கும் அதிகாரிகளுக்கும் ஒருங்கிணைப்பில்லை. மாநகராட்சியில், 300 முதல், 400 சதவீதம் வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது; குப்பைக்கு வரி போடப்பட்டுள்ளது.
வரலாறு காணாத அளவுக்கு கனிம வள கொள்ளை நடக்கிறது. கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்திச் செல்லப்படுகிறது. உளவுப்பிரிவு வாயிலாக விசாரித்து நடவடிக்கை எடுங்கள். தகவல் உண்மைக்கு மாறாக இருப்பின், என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.