பைக் டாக்ஸிக்கு தடை கோரி மனு
கோவையில் ரேபிடோ பைக் டாக்சியால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை தடை செய்ய கோரியும், மாவட்ட ஆட்டோ தொழிலாளர் அனைத்து சங்க கூட்டு கமிட்டியினர், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தனர். முன்னதாக, கலெக்டர் அலுவலகம் முன் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் கூடினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பெண்ணிடம் போன் பறித்தவர் கைது
மேட்டுப்பாளையம் சேரன் நகரை சேர்ந்தவர் யாமினி, 22; தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன் தினம், யாமினி அரசு பஸ்சில் காந்திபுரம் வந்தார். கைப்பையில் இருந்த மொபைல் போனை ஒரு வாலிபர் பறித்து, தப்பி செல்ல முயன்றார். யாமினி சத்தம் போட்டார்.
அக்கம்பக்கத்தினர் வாலிபரை போலீசில் ஒப்படைத்தனர். அந்நபர், செல்வபுரம் ரங்கசாமி காலனியை சேர்ந்த ஸ்டாலின்,30, என்பதும்,டெக்ஸ்டைல் நிறுவனத்தில் மேலாளர் என்பதும் தெரிந்தது. அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
பீர் பாட்டிலால் குத்திய 4 பேர் கைது
கோவை சீரநாயக்கன்பாளையம் திலகர் நீதியை சேர்ந்தவர் அஜித், 26; பெயின்டர். பி.என்.புதூர் புதுக்கிணறு வீதியில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த அவரது நண்பர்கள் பணம் கேட்டனர். பணம் இல்லை என தெரிவித்தார்.
தகராறு ஏற்பட்டதும் அஜித்தை பீர்பாட்டிலால் குத்தினர். ஆர்.எஸ்.புரம் போலீசில் அளித்த புகாரின் பேரில், வீரகேரளம் சிறுவாணி ரோட்டை சேர்ந்த பீடி ரமேஷ், 31, எஸ்.எஸ்.பாளையத்தை சேர்ந்த கார்த்திக், 27, சீரநாயக்கன்பாளையம் ராஜன் காலனியை சேர்ந்த சரவணன், 31, பி.என்.புதூர் ஜீவா நகரை சேர்ந்த எலக்ட்ரீசியன் படையப்பா, 24 ஆகியோரை கைது செய்தனர்.