சங்கரன்கோவில் : சங்கரன்கோவில் மார்க்கெட்டிற்கு மல்லிகை பூ வரத்து அதிகரித்துள்ளது. கிராக்கி இல்லாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தென் மாவட்டங்களில் மதுரை, தோவாளை பூ மார்க்கெட்டுகளுக்கு அடுத்ததாக சங்கரன்கோவில் பூ மார்க்கெட் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இங்கிருந்து தமிழகம் மட்டுமல்லாது, கேரள மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கு பூக்கள் தினமும் அனுப்பப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களாக பனி காரணமாக மல்லிகை விளைச்சல் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது வெயில் துவங்கியுள்ளதால் சங்கரன்கோவில் மார்க்கெட்டிற்கு மல்லிகை பூ அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது. தினமும் சுமார் 2 டன் அளவில் மல்லிகைபூ வரத்து உள்ளது.
ஆனால் கிராக்கி இல்லாததால் ஒரு கிலோ மல்லிகை பூ சுமார் 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.