அன்னுார் : பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி, கறுப்புக் கொடி ஏற்றி பால் நிறுத்த போராட்டம் நேற்று நடந்தது.
கோவை மாவட்டம், அன்னுார், ஆலபாளையம் மற்றும் வரதையம்பாளையத்தில் பால் குளிரூட்டும் நிலையங்கள் உள்ளன. அன்னுார், சிறுமுகை, மேட்டுப்பாளையம், காரமடை பகுதியில் தினமும் 40 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இங்கு குளிரூட்டப்பட்டு கோவை ஆவினுக்கு அனுப்பப்படுகிறது.
பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும்; தீவனத்திற்கு மானியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பால் நிறுத்த போராட்டத்தை பால் உற்பத்தியாளர் சங்கம் அறிவித்தது.
கோவை மாவட்டம், அன்னூர் வட்டாரத்தில் நேற்று பல இடங்களில் பால் உற்பத்தியாளர்கள் ஆவினுக்கு பாலை வழங்காமல் போராட்டம் நடத்தினர். பிள்ளைப்பம்பாளையம் பால் உற்பத்தியாளர் சங்கத்தில் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற கோவை ஆவின் துணைப் பதிவாளர் புவனேஸ்வரி பேசுகையில், ''உங்கள் கோரிக்கைகளை ஆவின் தலைமைக்கு தெரிவிக்கிறோம். போராட்டத்தை கைவிடுங்கள்,'' என்றார்.
எனினும் பால் உற்பத்தியாளர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டம் தொடரும் என தெரிவித்தனர். இதையடுத்து, அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.