கோவை : பால் கொள்முதலில் ஏற்பட்ட தாமதத்தால் கோவை ஆவின் பால் உற்பத்தி மையத்தில் பல ஆயிரம் லிட்டர் பால் கெட்டுப்போனது.
கோவை பச்சாபாளையத்திலுள்ள ஆவின் பால் உற்பத்தி மையத்திற்கு, 350 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களிலிருந்து 1.05 லட்சம் லிட்டரும், திருப்பூரிலிருந்து 90 ஆயிரம் லிட்டரும், ஈரோட்டிலிருந்து 35 ஆயிரம் லிட்டர் என, மொத்தம் 2.30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
பால் உற்பத்தியாளர்கள், பால் விலையை உயர்த்திக்கொடுக்க வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் காரணமாக, ஒரு சில பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களிலிருந்து ஆவின் பால் நிறுவனத்துக்கு பால் வழங்குவதில்லை. நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டத்திலிருந்து வழக்கமாக வரவேண்டிய, 35 ஆயிரம் லிட்டர் பால் வந்து சேருவதில் தாமதம் ஏற்பட்டது.
கோவை ஆவினுக்கு வந்த பின், பாலிலிருந்து ஒரு வித வாடை வீசத் துவங்கியது. அதற்கு பதிலாக இருப்பு வைக்கப்பட்டிருந்த பால் பவுடரை கொண்டு, 35 ஆயிரம் லிட்டர் பால் தயார் செய்யப்பட்டு வழக்கமான விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து பணியாளர்கள் விழிப்போடு இருக்கவும், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை, மேலாளர்கள் மற்றும் விரிவாக்க அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வரவும் ஆவின் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.