திருப்புத்துார் : திருப்புத்துாரில் கல்லுாரி மாணவரை தாக்கிய தி.மு.க., கவுன்சிலர் உட்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் தனியார் கல்லுாரியில் தி.புதுப்பட்டி முருகானந்தம் மகன் தினேஷ்குமார், 19, என்பவர் பி.எஸ்சி., இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.
இவர் உட்பட நண்பர்கள், நேற்று மாலை 4:30 மணிக்கு கல்லுாரி முடிந்து மதுரை ரோட்டில் நடந்து வந்தனர். அரசு மருத்துவமனை அருகே பாலம் கட்டுமான பணி நடப்பதால் ஓரமாக நடந்து சென்றனர்.
அப்போது, அதிவேகமாக காரில் வந்தவர்கள், மாணவர்களை ஓரமாக செல்லுமாறு கூறி ஆபாசமாக திட்டினர்.'ஓரமாக தான் செல்கிறோம். ஏன் திட்டுகிறீர்கள்' என, மாணவர்கள் கேட்டுள்ளனர்.
காரில் இருந்து இறங்கிய திருப்புத்துார் பேரூராட்சி தி.மு.க., 14வது வார்டு கவுன்சிலர் பஷீர்அகமது, எட்டாவது வார்டு தி.மு.க., கவுன்சிலரின் கணவர் பிரேம் நவாஷ் உட்பட நான்கு பேர் மாணவர் தினேஷ்குமாரை கடுமையாக தாக்கி ரத்த காயம் ஏற்படுத்தினர்.
மற்ற மாணவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டு திருப்புத்துார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். புகாரின்படி, தி.மு.க., கவுன்சிலர் உட்பட நான்கு பேர் மீது இன்ஸ்பெக்டர் கலைவாணி வழக்கு பதிந்துள்ளார்.