அ.தி.மு.க., துணை பொதுச் செயலர் முனுசாமி பேட்டி:
தமிழகத்தில் உள்ளாட்சி, நகராட்சி, பொதுப்பணித் துறை, கல்வித் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் முடங்கி உள்ளன. பிளஸ் 2 பொதுத்தேர்வில், 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை என்பது வெட்கக்கேடு. கல்வி அதிகாரிகள், சி.இ.ஓ.,க்கள் என்ன செய்தனர் என்பது புரியவில்லை.

கல்வி அதிகாரிகளின் பிள்ளைகள், பிரபலமான தனியார் பள்ளிகளில் தானே படிக்கிறாங்க... அதனால,யார் தேர்வு எழுத வந்தாலும், வராவிட்டாலும் அவங்களுக்கு என்ன கவலை?
அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக் குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை:
அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும்கிராமப்புற மாணவர்களின் மருத்துவப் படிப்பிற்கு முக்கியத்துவம் தருவதில், தமிழகம்முன்மாதிரியாக உள்ளது. அதே நேரத்தில், அரசுப் பணியில் சேரும் முதல் தலைமுறை மருத்துவர்களுக்கு ஊதியம் தருவதிலோ, நாட்டிலேயே கடைசி இடத்தில் தான் தமிழகம் உள்ளது என்பது, முதல்வருக்கு தெரியுமா?
'எல்லாத்துலயும் தமிழகத்தை 'நம்பர் ஒன்' ஆக்கிட்டு இருக்கோம்... இதுலயாவது, கடைசி இடத்துல இருப்போம்'னு முதல்வர் மாத்தி யோசிச்சிருப்பாரோ?
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
தமிழகத்தில், ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்யும் பாலின் விலையை, லிட்டருக்கு 7 ரூபாய் உயர்த்த வலியுறுத்தி, பால் விற்பனை நிறுத்தப் போராட்டம் துவங்கியுள்ளது. தமிழகத்தில் ஆவின் பாலை விட, தனியார் நிறுவனங்களின் பால் விலை லிட்டருக்கு, 12 முதல், 26 ரூபாய் வரை அதிகமாக உள்ளது. எனவே, முதல்வர்ஸ்டாலின் தலையிட்டு, ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.

கொள்முதல் விலையை உயர்த்திட்டு, விற்பனை விலையை உயர்த்திடாம இருக்கணுமே என்பது தான், பொதுமக்களின் பயமாக இருக்குது!
அ.தி.மு.க., தேர்தல் பிரிவு துணைச் செயலர் இன்பதுரை பேச்சு:
தி.மு.க.,விடம் நீதியை எதிர்பார்ப்பது மூட நம்பிக்கை;அவர்கள், காட்டாட்சியே நடத்துவர். பழனிசாமி மீது மட்டுமின்றி, அவரதுமெய்க்காவலர் மீதும் வழக்கு பதியப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது,தமிழக அரசின் கடமை. போலீசாரை காப்பதுஎங்கள் பொறுப்பு. ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல் வரும்; ஆட்சி மாறும். சட்டம் இரு பக்கமும் கூர்மையான ஆயுதம்.
அதே சட்டத்தை பயன்படுத்தி, நாங்களும் திருப்பித் தாக்குவோம்.அடேங்கப்பா... என்னா ஒரு வில்லத்தனம்... உங்க ரெண்டு கட்சிகளையும், 'ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்'னு பெருந்தலைவர் காமராஜர் சும்மாவா சொன்னாரு?
தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா பேட்டி:
தி.மு.க., கட்சி நிர்வாகிகளே, போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து அடித்து நொறுக்குவது,சொந்த கட்சி எம்.பி., வீட்டையே தாக்குவதுதான், திராவிட மாடல். கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால், இதுபோன்ற சம்பவம் நடந்திருக்குமா? இதற்கு முதல்வர் பதில் கூற வேண்டும். பல அமைச்சர்களின் நடவடிக்கை, மக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு உள்ளது.

அவங்களாவது, தங்களுக்குள்ள தானே அடிச்சுக்கிட்டாங்க... ஆனா, இவங்க கட்சியில ஒரு காலத்துல தலைவரே, தொண்டர்களை சினிமா பாணியில பொளந்து கட்டினாரே!
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை:
அமைச்சருடன் பால் உற்பத்தியாளர்கள் நடத்திய பேச்சு தோல்வி அடைந்ததை தொடர்ந்து, பால் நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால், ஆவின் பால் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தை முடிவுக்குகொண்டு வர, அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

ஆவின்ல அனுதினமும் நடக்கிற அக்கப்போரை பார்த்தா, 'நம்மால நிர்வாகம் பண்ண முடியாது'ன்னு, தனியாரிடம் தள்ளிவிட பார்க்கிறாங்களோ என்ற எண்ணம் தான் எழுது!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை:
பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், பள்ளிக்கு வருவதை நிறுத்திக் கொண்ட நிலையில், அவர்களும் பிளஸ் 2 படிப்பை தொடர்வதாக, வருகை பதிவு வழங்கி, தேர்வு எழுத 'ஹால் டிக்கெட்' கொடுத்த விவகாரம்,50 ஆயிரம் பேர் எழுத வராத போது தான் தெரிய வந்திருக்கிறது. இதெல்லாம், பள்ளி மாணவ - மாணவியர் இடை நிற்றலை மறைப்பதற்காகவே என்று கல்வியாளர்கள்சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு, இதுவரை பள்ளிக்கல்வித் துறையிடம் இருந்து பதில் இல்லை. வரும் ஆண்டிலாவது இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'அரசு பள்ளிகள், வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் சின்னம்'னு அமைச்சர் மகேஷ் அடிக்கடி தம்பட்டம் அடிச்சதெல்லாம், வெறும், 'ரைமிங்'தான்னு இப்ப அம்பலம் ஆகிடுச்சே!
தமிழக பா.ஜ., செயலர் அஸ்வத்தாமன் பேட்டி:
ரேஷன் கடையில், கொரோனா காலத்தில், 40 கிலோ இலவசஅரிசி வழங்கப்பட்டது. இதில், 20 கிலோவை மத்திய அரசும், 20 கிலோவை மாநில அரசும் வழங்கின. தற்போது, தமிழக அரசு வழங்கிய அரிசி நிறுத்தப்பட்டு விட்டது. பிரதமர் மோடி வழங்கும், 20 கிலோ அரிசி மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால், மோடி அரசு அரிசியை நிறுத்தி விட்டதாகக் கூறுகின்றனர்.
அரிசியில் மோடி படம், பெயர் இருக்கா... அதனால, ஆளுங்கட்சியினர் சொல்வது தான் இங்க வேதவாக்கு!