மா.திறனாளிக்கு நலத்திட்ட உதவி
ஆத்துார்: அப்துல்கலாம் தொண்டு நிறுவனம் சார்பில் ஆத்துாரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நேற்று நடந்தது. அதில், ஆத்துார் கிளை நிர்வாக இயக்குனர் சீனிவாசன், துணை இயக்குனர் ஐயப்பன் ஆகியோர், 5 பேருக்கு, 3 சக்கர சைக்கிள் உள்பட, தலா, 50 ஆயிரம் வீதம், 2.50 லட்சம் ரூபாயில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
அங்கன்வாடி மையம் திறப்பு
கெங்கவல்லி: உலிபுரம் ஊராட்சி மூக்காகவுண்டன்புதுாரில், கெங்கவல்லி தொகுதி
எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், 13 லட்சம் ரூபாயில், அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. அந்த கட்டடத்தை, கெங்கவல்லி எம்.எல்.ஏ., நல்லதம்பி நேற்று திறந்து வைத்தார். கெங்கவல்லி அ.தி.மு.க., ஒன்றிய செயலர்களான, மேற்கு ரமேஷ், கிழக்கு ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.
ரூ.1.70 கோடிக்கு பருத்தி ஏலம்
இடைப்பாடி: கொங்கணாபுரத்தில் உள்ள, திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர் விற்பனை சங்க கிளையில் பருத்தி ஏலம் நேற்று நடந்தது. ஏராளமான விவசாயிகள், பருத்தியை கொண்டு வந்தனர். பி.டி., ரகம், 100 கிலோ மூட்டை, 6,769 முதல், 7,699 ரூபாய்; டி.சி.எச்., ரகம், 7,650 முதல், 8,599 ரூபாய்; கொட்டு ரகம், 4,250 முதல், 5,269 ரூபாய் வரை விலைபோனது. 6,750 மூட்டைகள் மூலம், 1.70 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
பல்வேறு பணிக்கு பூமி பூஜை
சேலம்: சேலம் மாநகராட்சி, 60வது வார்டில் துாய்மை இந்தியா திட்டத்தில், 85 லட்சம் ரூபாய் மதிப்பில் மட்காத உலர் குப்பையை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திரன், பணிகளை தொடங்கி வைத்தனர். இத்துடன் பல்வேறு பகுதிகளில் சாலை பணி, 47வது வார்டில் சமுதாய நலக்கூடுதல் கட்டடம் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் தொடங்கப்பட்டன.
25 பேருக்கு சான்றிதழ் வழங்கல்
ஆத்துார்: கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில், பிறப்பு, இறப்பு சான்று வழங்கும் முகாம், ஆத்துார் ஆர்.டி.ஓ., சரண்யா தலைமையில் நேற்று நடந்தது. அதில் நீண்ட நாளாக பிறப்பு, இறப்பு பதிவு செய்யப்படாத இனங்களுக்கு, 25 பேருக்கு சான்றிதழ்களை, ஆர்.டி.ஓ., வழங்கினார். தாசில்தார் வெங்கடேசன் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
பைக்குகள் மோதி வாலிபர் பலி
தாரமங்கலம்: ஓமலுார், முத்துநாயக்கன்பட்டியை சேர்ந்த மணி மகன் மணிகண்டன், 29. தாரமங்கலத்தில் பெயின்ட் கடையில் பணிபுரிந்தார். நேற்று முன்தினம் பணி முடிந்து இரவு, 9:30 மணிக்கு, 'சைன்' பைக்கில் சிக்கம்பட்டியில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த 'ஸ்பிளன்டர்' பைக் மோதியதில் சம்பவ இடத்தில் மணிகண்டன் இறந்தார். தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ரூ.2.45 கோடிக்கு ஆடுகள் விற்பனை
இடைப்பாடி, மார்ச் 19-
கொங்கணாபுரத்தில் நேற்று ஆட்டுச்சந்தை கூடியது. ஏராளமான விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். 10 கிலோ வெள்ளாடு, 6,150 முதல், 6,300 ரூபாய்; செம்மறியாடு, 6,050 முதல், 6,250 ரூபாய் வரை விலைபோனது. 3,550 ஆடுகள் மூலம், 2 கோடியே, 45 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
இதுகுறித்து, வியாபாரிகள் கூறுகையில், 'தற்போது கோடைகாலம் ஆரம்பித்துள்ளதால் வயல்களில் புற்கள் இன்றி வறட்சியே காணப்படுகிறது. வழக்கமாக மாசியில் பெய்யும் மழை நடப்பாண்டு பெய்யவில்லை. இதனால் கிராமப்
புறங்களில் வறட்சி நிலவுவதால் ஆடு, மாடுகள் தீவனம் இன்றி தவிக்கின்றன. இதனால் சந்தைக்கு ஆடுகள் வரத்து சற்று அதிகரித்தது' என்றனர்.
மீண்டும் மனைவி மாயம்
கணவர் போலீசில் புகார்
மேச்சேரி, மார்ச் 19-
மீண்டும் மனைவி மாயமானதாக மேச்சேரி போலீஸ் ஸ்டேஷனில் கணவர் புகார் அளித்தார்.
மேச்சேரி, காமனேரி காட்டுவளவை சேர்ந்தவர் செல்வம், 28. இவரது மனைவி லாவண்யா, 23. கடந்த பிப்., 25ல் மனைவியை காணவில்லை என, செல்வம் புகார் அளித்தார். மேச்சேரி போலீசார், கடந்த, 1ல் அவரை கண்டுபிடித்து ஒப்படைத்தனர். இந்நிலையில், 13ல் அவர் மீண்டும் மாயமானதாக கூறி, நேற்று செல்வம் புகார் அளிக்க, போலீசார் தேடுகின்றனர்.
ரூ.2 லட்சம்
மோசடி புகார்
சேலம், மார்ச் 19-
சேலம், ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் வடிவேல், 56. மருந்து நிறுவனத்தில் மேலாளராக பணிபுரியும் இவர், நேற்று முன்தினம் சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார் மனு:
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை சேர்ந்தவர் பூவரசன், 27. இவர், எங்கள் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்தார். அவர் வசூல் செய்த பணத்தில், 2 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். அதனால் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.