ஆத்துார்: ஆத்துார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, தலைவாசல் போலீசார் நேற்று, வரகூர், அம்மன் நகரில் ஆய்வு செய்தனர். அப்போது, ராமர், 48, என்பவர் விற்பனைக்கு வைத்திருந்த, 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். மேலும் கருமந்துறை, மணியாரகுண்டம் பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்கு போடப்பட்டிருந்த, 1,400 லிட்டர் ஊறலை போலீசார் அழித்தனர். தவிர, கெங்கவல்லி அருகே கடம்பூரில் நேற்று மதுபாட்டில் விற்ற ரவி, 52, குமரேசன், 37, ஆகியோரை கைது செய்து, 30 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பெத்தநாயக்கன்பாளையம், பாச்சாடு கிராமத்தில் நேற்று முன்தினம் கருமந்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 7 பிளாஸ்டிக் பேரல்களில் இருந்த, 800 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களை அழித்தனர். சாராயம் காய்ச்சிய, அப்பகுதியைச் சேர்ந்த குமாரை, போலீசார் தேடுகின்றனர்.
50 மூட்டை வெல்லம்
ஆத்துார் ஊரக போலீசார், அம்மம்பாளையத்தில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வந்த சரக்கு மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 50 மூட்டை வெல்லம், 120 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரிந்தது. விசாரணையில், கடத்தி வந்தவர், கள்ளக்
குறிச்சி மாவட்டம் வெள்ளிமலையை சேர்ந்த ஏழுமலை, 31, என்பவரை கைது செய்தனர். அவரிடம், வெல்லம், சாராயம், கடத்தலுக்கு பயன்படுத்திய வேனை பறிமுதல் செய்தனர்.