பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்தில், 15 வார்டுகள் உள்ளன. அதில், அ.தி.மு.க., 4, தி.மு.க., 11 வார்டுகளில் வெற்றி பெற்றன. தி.மு.க.,வை சேர்ந்த பரமேஸ்வரி தலைவியாகவும், பிரபுகண்ணன் துணைத்
தலைவராகவும் உள்ளனர். அங்கு அ.தி.மு.க., வெற்றி பெற்ற வார்டில், ஆளுங்கட்சியினர் எந்த பணியும் செய்யாமல் புறக்கணிக்கின்றனர் என, அ.தி.மு.க.,வினர் குற்றம்சாட்டினர்.
இதனால், அந்த வார்டுகளுக்கு, அ.தி.மு.க.,வின், வீரபாண்டி தொகுதி, எம்.எல்.ஏ., ராஜமுத்து, தொகுதி மேம்பாட்டு நிதி, 38 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். தொடர்ந்து, திட்டப்பணி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அ.தி.மு.க.,வின், பனமரத்துப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலர் பாலச்சந்திரன் தலைமை வகித்தார்.
எம்.எல்.ஏ., ராஜமுத்து, 3வது வார்டில் கான்கிரீட் சாலை, 8வது வார்டில் கான்கிரீட் சாலை, 11வது வார்டு களரம்பட்டியில் ஆழ்துளை குழாய் கிணறு அமைத்தல், தாசிகாட்டில் சிறு தொட்டி, 15வது வார்டில் கான்கிரீட் சாலை பணிகளை தொடங்கி வைத்தார். ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன், வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால் டவுன் பஞ்சாயத்து அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்கவில்லை.