பெண்ணிடம் சில்மிஷம்
வாலிபருக்கு தர்ம அடி
சேலத்தை சேர்ந்த, 45 வயது பெண், நேற்று கணவருடன் வெளியூர் சென்றுவிட்டு புது பஸ் ஸ்டாண்ட் வந்தார். கணவர், வாகனத்தை எடுத்து வர சென்றார். அப்போது தனியே நின்றிருந்த பெண்ணிடம், அங்கு வந்த வாலிபர், சில்மிஷம் செய்துள்ளார்.
பெண் கூச்சலிட, அங்கிருந்தவர்கள் திரண்டு வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் மதுரை, மேலுார் அருகே கோட்டப்பட்டியை சேர்ந்த இளையராஜா, 34, என்பதும், மது அருந்தி இருந்ததும் தெரிந்தது.
முதியவர் மீது தாக்குதல்
மகன், பேரன் மீது வழக்குதலைவாசல் அருகே சாத்தப்பாடியை சேர்ந்தவர் அம்மாசி, 73. இவரது மகன்கள் பெரியசாமி, முத்துசாமி. சில ஆண்டுக்கு முன் முத்துசாமி இறந்துவிட்டார். இதனால் பேத்தி கவிதாவுடன், அம்மாசி வசிக்கிறார். அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தபோது, கவிதா, மருத்துவ செலவுகளை பார்த்தார்.
இதனால் அவருக்கு, 850
சதுரடி இடத்தை, அம்மாசி எழுதி வைத்துள்ளார். இதையறிந்த பெரியசாமி, பேரன் ரமேஷ், அவரது மனைவி வாசு ஆகியோர், அம்மாசியை தாக்கினர். இதுகுறித்து அவர் புகார்படி, 3 பேர் மீது வழக்குப்பதிந்து, கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.
கர்நாடகா அதிகாரிகளிடம்
மேட்டூர் எம்.எல்.ஏ., மனு
கர்நாடகா, சாம்ராஜ் நகர் கலெக்டர் ராஜா, எஸ்.பி., பத்மினி சஹோ, மாவட்ட வன அலுவலர்
சந்தோஷ்குமார் ஆகியோர், நேற்று மாதேஸ்வரன் மலைக்கு வந்தனர். அப்போது, சேலம் மாவட்டம் மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் தலைமையில் தாசில்தார் முத்துராஜா, வனச்சரகர் சிவானந்தன், கொளத்துார் பி.டி.ஓ., சீனிவாசன் ஆகியோர் மனு வழங்கினர். அதன் விபரம்:
கர்நாடகா வனத்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 2014ல் உயிரிழந்த பழனி குடும்பத்துக்கும், செட்டிப்பட்டியை சேர்ந்த ராஜா குடும்பத்துக்கும், கர்நாடகா அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
பல்வேறு கிராம மீனவர்களையும், மக்களையும் கர்நாடகா வனத்துறை தொடர்ந்து அத்துமீறி தாக்குவது, துப்பாக்கியால் சுடுவது, மீனவர்களின் வலையை அறுத்து செல்வதை தடுக்க வேண்டும். கர்நாடக அரசு தமிழகத்துக்குள் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.
இலவசமாக பால் வழங்கி
உற்பத்தியாளர்கள் போராட்டம்பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி, இலவசமாக பால் வழங்கி
உற்பத்தியாளர்கள் போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
ஓமலுார் அருகே பாகல்பட்டியில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநில துணைத்தலைவர் பெரியண்ணன் தலைமையில், பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தக்கோரி நேற்று, 2ம் நாளாக போராட்டம் நடத்தினர். அதில் சொசைட்டிக்கு பால் வழங்க வந்த விவசாயிகள், ஆவினுக்கு வழங்காமல் மக்களுக்கு இலவசமாக வழங்கி போராட்டம் நடத்தினர்.
அரசு கொள்முதல் விலையை உயர்த்தும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். ஓமலுார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தணிக்கை பெயரில் பிடித்தம்
பட்டு வளர்ச்சி ஓய்வூதியர் குமுறல்தமிழ்நாடு அரசு பட்டு வளச்சித்துறை ஓய்வூதியர் சங்க மண்டல நிர்வாகிகள் கூட்டம், நேற்று முன்தினம் சேலத்தில் நடந்தது. மண்டல தலைவர் பெருமாள் தலைமை வகித்தார்.
அதில் பட்டு வளர்ச்சி துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்று, 10 ஆண்டாகியும் தணிக்கை பெயரில் பிடித்தம் செய்வதை நிறுத்த வேண்டும்; இளநிலை பட்டு ஆய்வாளர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் கணக்கிட்டு தேர்வு நிலை வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தல்; உதவி பட்டு ஆய்வாளர்களில் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, பட்டு வளர்ச்சி துறை இயக்குனர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. செயலர் கருணாநிதி, துணைத்தலைவர் பெரியசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
வீ.ஜீ.விகாஸ் பள்ளியில் பட்டமளிப்பு விழா
மல்லுார், வீ.ஜீ.விகாஸ் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா, நேற்று முன்தினம் நடந்தது. சேலம் ஹெரிடேஜ் வித்யாலயா பள்ளி தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் கணேஷ் வரவேற்று, விழாவை தொடங்கி வைத்தார். வீ.ஜீ.விகாஸ் பள்ளி நிர்வாகத்தினர், மழலையர் கல்வி முடித்து, 1ம் வகுப்புக்கு செல்ல உள்ள மாணவ, மாணவியருக்கு பட்டம், பதக்கம், சான்றிதழ்களை வழங்கி, வாழ்த்தினர்.
முதன்மை செயல் அலுவலர் திருநாவுக்கரசு, பள்ளி சிறப்புகளை கூறினார். பிள்ளைகள் பெற்ற பதக்கம், விருதுகளை பார்த்து பெற்றோர் மகிழ்ந்தனர். பள்ளி நிர்வாக அலுவலர் வினோத்குமார், விழா ஏற்பாடுகளை செய்திருந்தார். மழலையர் கல்வி ஒருங்கிணைப்பாளர் சகுந்தலாகணேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
அனல் மின்நிலையம் அருகே
குழாய் உடைந்து குடிநீர் வீண்
மேட்டூர், தொட்டில்பட்டி காவிரியாற்றில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு, காடையாம்பட்டி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் மூலம் தினமும், 28 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதன்மூலம் காடையாம்பட்டி, ஓமலுார், தொப்பூர், வழி இடை கிராமங்களுக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.
நேற்று காலை, 11:00 மணிக்கு, அனல் மின் நிலையம் செல்லும் சாலையில் உள்ள காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்ட ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக, ஒரு மணி நேரத்திற்கு மேல் சாலையில் வழிந்தோடியது.
இதனால் சாலை முழுதும் வெள்ளமாக மாறியது. அந்த வழியே சென்ற இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், மின் மோட்டாரை நிறுத்தி உடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
Advertisement