சேலம்: சேலத்தில், 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
சேலம் மாவட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், கோட்டை மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ராபர்ட்கிங்ஸ்லி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ராஜாராம் முன்னிலை வகித்தார்.
அதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தல்; இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை முற்றிலும் களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்குதல்; தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும்படி பி.லிட்., பி.எட்., படித்த நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியத்தை பழைய முறையில் தொடர செய்தல்; தகுதி தேர்வை ரத்து செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக முன்னுரிமைப்படி ஆசிரியர் நியமனங்கள் செய்ய வேண்டும் என்பன உள்பட, 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர் சத்தியகுமாரி, வட்டார தலைவர்கள் விஜயகுமார், ரவி உள்பட பலர் பங்கேற்றனர்.