வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் தேர்தலை தொடர அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், மார்ச் 22 வரை முடிவுகளை வெளியிட தடை விதித்துள்ளது.

அதிமுக பொது செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது அவசர வழக்காக விசாரிக்குமாறு கோரிக்கை விடுத்ததன் பேரில் இன்று விசாரணை நடந்தது. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு முடியும் வரை பொதுசெயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
விசாரணையில் பன்னீர் செல்வம் சார்பில் ஆஜரான வக்கீல்கள் வாதிட்டதாவது :
எம்ஜிஆர், ஜெயலலிதா வகித்த பதவி
பொதுக்குழு தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் போது பொதுசெயலாளர் தேர்தல் நடத்தக்கூடாது. நிரந்தர பொதுசெயலாளர் ஜெயலலிதா என்று அறிவித்து விட்டு தற்போது பொதுசெயலாளர் தேர்தல் நடத்துவது சரியல்ல.
பொதுசெயலாளர் தேர்தலில் எந்த விதியையும் பின்பற்றவில்லை. வேட்பு மனு இன்று முடிந்து விட்டதாக பொதுசெயலாளர் இன்று தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படலாம். தேர்தல் ஆணையம் இடைக்கால பொதுசெயலாளர் பதவியை இதுவரை அங்கீகரிக்கவில்லை. இரட்டை தலைமைக்கே தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா வகித்த பதவிகளை வேறு யாரும் அடையவே முடியாது. கட்சிகளின் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்தல் நடத்தப்பட வேண்டும். விதிக்கு முரணான இந்த தேர்தலை நிறுத்த வேண்டும். இதற்கென கோர்ட் தடை விதிக்க வேண்டும் என வாதிட்டனர்.

பழனிசாமி சார்பில் ஆஜரான வக்கீல்கள் வாதிட்டதாவது ;
ஒற்றை தலைமை
உள்கட்சி விவகாரங்களில் கோர்ட் தலையிட முடியாது. என சுப்ரீம் கோர்ட்டே தெரிவித்துள்ளது. தற்போது நடப்பது அதிமுகவின் உள்கட்சி விவகாரம். இந்த வழக்கை தொடர பன்னீர்செல்வம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மனு தாக்கல் செய்த யாரும் அடிப்படை உறுப்பினர்கள் இல்லை. ஒன்றரை கோடி உறுப்பினர்கள் ஆதரவின்பேரில் தான் தேர்தல் நடக்கிறது. ஜூலை 11 நடந்த பொதுக்குழு சட்டப்படி நடந்துள்ளதாக சுப்ரீம்கோர்ட் ஒத்து கொண்டுள்ளது. பன்னீர்செல்வத்திற்கு ஒரு உறுப்பினர் கூட ஆதரவு இல்லை. கடந்த ஜூன் மாதம் நடந்த பொதுக்குழுவில் ஒற்றை தலைமையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்கே உண்டு. எனவே பன்னீர்செல்வம் தரப்பு மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், பிரபாகர் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இவர்கள் சார்பில் பிரபல வழக்கறிஞர்கள் பி.ஸ். ராமன், மணிசங்கர், ஸ்ரீராம் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
பழனிசாமி சார்பில் சி.எஸ். வைத்தியநாதன், விஜயநாராயணன் ஆஜராகி வாதிட்டனர் .
தீர்ப்பு
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குமரேஷ்பாபு பிறப்பித்த உத்தரவு: பொதுக்குழு தொடர்பான வழக்கு மார்ச் 17 ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து ஏப்ரல் 11க்கு ஒத்திவைக்கப்பட்ட பின், பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த என்ன அவசியம்? ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது அவசர வழக்காக ஏன் பதிவு செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பியதுடன், தேர்தல் நடைமுறைகளை தொடரலாம். ஆனால், முடிவுகளை வெளியிடக்கூடாது. மார்ச் 22 ல் விசாரணை நடக்கும். ஜூலை 11 ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பான வழக்கை வரும் மார்ச் 22 ல் விசாரித்து விரைவில் தீர்ப்பளிக்கப்படும். அதுவரை அதிமுக பொதுசெயலாளர் தேர்தல் முடிவை வெளியிட வேண்டாம். ஒரு நபர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பது கேள்விக்குறியாகிறது. இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார். வழக்கு மார்ச் 22க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Advertisement