பைக் மோதி சமையல்
தொழிலாளி பலி
ஈரோடு, வேப்பம்பாளையத்தை சேர்ந்தவர் தர்மராஜ், 55, சமையல் தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, 8:30 மணியளவில் வேப்பம்பாளையம் சாலையை கடக்க நடந்து சென்றார்.
அவ்வழியாக வந்த ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக், இவர் மீது மோதியது. பலத்த காயமடைந்த தர்மராஜை, ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார். ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, பைக் ஓட்டி வந்த அப்துல்ரத் என்பவரை பிடித்து விசாரிக்கின்றனர்.
கனரக வாகனங்களால்
போக்குவரத்து நெரிசல்கோபி, சரவணா தியேட்டர்-வாய்க்கால்ரோடு சாலையில், கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கோபி, சரவணா தியேட்டர் சாலை வழியே, வாய்க்கால்ரோடு செல்லும் பிரதான சாலை உள்ளது. இப்பகுதியின் இருபுறமும், பூஜா ஸ்டோர், பலசரக்கு கடை, கல்யாண் ஸ்டோர் என பல்வேறு கடைகள் உள்ளன. இங்கு வரும் சரக்கு வாகனங்கள், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தி கொள்கின்றனர்.
இதனால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை செல்வோர், பள்ளி செல்வோர் அவதியுறுகின்றனர். எனவே, போக்குவரத்து போலீசார், கனரக வாகனங்கள் செல்வதற்கு நேர கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.
ஆசிரியர் இயக்கம் சார்பில்
கோபியில் கிளை துவக்கம்இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், ஈரோடு மாவட்டம் மற்றும் வட்டார புதிய கிளைகள் துவக்க விழா கோபியில் நடந்தது. மாவட்ட செயலாளர் மாரிமுத்து வரவேற்றார்.
மாநில தலைவர் ஆனந்தகுமார் தலைமை வகித்தார். பொருளாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் ஞானசேகரன் வாழ்த்தி பேசினார். பொதுச்செயலாளர் ராபர்ட், மாவட்ட துணை செயலாளர் கருப்புசாமி ஆகியோர் பேசினர். மாவட்ட பொருளாளர் கார்த்திக் நன்றி கூறினார்.
சித்தோடு சொசைட்டியில்
வெல்லம் விற்பனைஈரோடு அடுத்த சித்தோடு வெல்லம் சொசைட்டியில் நேற்று, 30 கிலோ எடையுள்ள, 1,800 மூட்டை நாட்டு சர்க்கரை வரத்தானது. ஒரு மூட்டை, 1,000 முதல், 1,100 ரூபாய் என்ற விலையில் விற்பனையானது.
உருண்டை வெல்லம், 2,600 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,100 முதல், 1,190 ரூபாய் என்ற விலையில் விற்பனையானது. அச்சு வெல்லம், 410 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,050 முதல், 1,160 ரூபாய் என்ற விலையில் விற்பனையானது.
கோகோ சாகுபடி குறித்து
கோபியில் கருத்தரங்கம்தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோவை முந்திரி மற்றும் கோகோ வளர்ச்சி இயக்குனரகம் சார்பில், தேசிய அளவிலான கோகோ சாகுபடி குறித்த கருத்தரங்கம் கோபியில் நடந்தது.
முதல்வர் வேதமணி தலைமை வகித்து, கோகோ சாகுபடியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். முதன்மை விஞ்ஞானி அழகேசன், ஈரோடு மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குனர் மரகதமணி, ஈரோடு வேளாண்மை துறை இணை இயக்குனர்
சின்னசாமி ஆகியோர் பேசினர். விஞ்ஞானிகள் பச்சியப்பன், சரவணக்குமார் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
ரூ.3.84 லட்சத்துக்கு
தேங்காய் விற்பனைஅவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு நேற்று, 37 ஆயிரத்து, 455 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
ஒரு கிலோ தேங்காய், 22.17 ரூபாய் முதல், 27.35 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 15 ஆயிரத்து, 223 கிலோ தேங்காய், மூன்று லட்சத்து, 84 ஆயிரத்து 81 ரூபாய்க்கு விலை போனது.
சத்தி மார்க்கெட்டில்
பூக்கள் விலை சரிவுசத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில், நேற்று நடந்த ஏலத்தில் முல்லை பூ கிலோ, 580 ரூபாய்க்கு ஏலம் போனது. மல்லிகை, 420 ரூபாய், காக்கடான், 225, செண்டுமல்லி, 60, கோழி கொண்டை, 58, கனகாம்பரம், 250,
சம்பங்கி, 40, அரளி, 70, துளசி, 40,
செவ்வந்தி, 120 ரூபாய்க்கு விற்பனையானது.
ரூ.1.15 கோடிக்கு
கொப்பரை ஏலம்
பெருந்துறை வேளாண்மை பொருட்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், ரூ.1.15 கோடிக்கு கொப்பரை ஏலம் நடந்தது. பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 3,153 மூட்டைகளில், ஒரு லட்சத்து, 43 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில், முதல் தரம் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ, 76.05 ரூபாய், அதிகபட்சமாக, 83.59 ரூபாய்க்கு விற்பனையாயின. இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக, 49.15 ரூபாய்,
அதிகபட்சமாக, 80.35 ரூபாய்க்கு விற்பனையாயின. மொத்தம் ரூ. 1.15 கோடிக்கு கொப்பரை வர்த்தகம் நடந்தது.
முதியோர்
இல்லங்களை
பதிவு செய்ய உத்தரவு
ஈரோடு மாவட்டத்தில், தனியார் மூலம் நடத்தப்படும் முதியோர் இல்ல உரிமையாளர்கள், தங்களது இல்லத்தை பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே பதிவு செய்தோர், அதை முறையாக புதுப்பித்து கொள்ள வேண்டும்.
முதியோர் இல்லத்தை பதிவு செய்யாமல் இருப்பவர்கள், பதிவை புதுப்பித்து கொள்ளாதவர்கள், அதற்கான கருத்துருவை வரும் ஏப்., 4க்குள், ஈரோடு கலெக்டர் அலுவலகம், 6ம் தளத்தில் செயல்படும், மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுக வேண்டும்.
தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி எச்சரித்துள்ளார்.
டூவீலர் மீது கார் மோதி
செக்யூரிட்டி பலி
காங்கேயம், மார்ச் 19-
காங்கேயம் அருகே, சாலையை கடக்கும் போது டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் செக்யூரிட்டி உயிரிழந்தார்.
காங்கேயம், தாராபுரம் ரோடு, அழகே கவுண்டன்புதுாரை சேர்ந்தவர் செல்வராஜ், 59. இவர், காடையூரில் உள்ள தனியார் கம்பெனியில்
செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை, 8:45 மணியளவில் செல்வராஜ் காடையூர் பகுதியில் எக்ஸ்.எல்.சூப்பர் இரு சக்கர வாகனத்தில் சாலையை கடந்த போது, கோவையில் இருந்து திருச்சி நோக்கி வேகமாக வந்த ஹூண்டாய் கார் செல்வராஜ் மீது மோதியது. இந்த விபத்தில்
செல்வராஜ் படுகாயமடைந்தார். அவரை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள்
ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
டிரைவருக்கு கொலை
மிரட்டல் விடுத்தவர் கைது
கோபி, மார்ச் 19-
கோபி அருகே நஞ்சகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் ஜோதீஸ்வரன், 51. தனியார் பள்ளி வேன் டிரைவர்; இவர் கடந்த, 14 மாலை, 5:00 மணிக்கு தன் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு சென்ற, அதே பகுதியை சேர்ந்த கிேஷார், 29, என்பவர், ஜோதீஸ்வரனை தகாத வார்த்தையால் திட்டினார். பின், இந்த ஏரியாவில் பெரிய ரவுடி எனவும், மது குடிக்க பணமும் கேட்டு தகராறு செய்தார்.
அதற்கு தன்னிடம் பணம் இல்லை என கூறிய ஜோதீஸ்வரனின் கழுத்தில் கத்தியை வைத்து, அவரது பாக்கெட்டில் இருந்து, கிேஷார் பணத்தை எடுக்க முயன்றார். ஜோதீஸ்வரன் கூச்சலிடவே உதவிக்கு வந்த அக்கம்பக்கத்தினரிடம், கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து ஜோதீஸ்வரன் கொடுத்த புகார்படி, கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிேஷாரை கைது செய்தனர்.
ரம்ஜான் நோன்பு குறித்து
அரசு ஹாஜி தகவல்
ஈரோடு, மார்ச் 19-
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் நோன்பு துவங்குவது குறித்து, ஈரோடு மாவட்ட அரசு ஹாஜி முகமது கிபாயத்துல்லா, வெளியிட்ட அறிக்கை:
நபிகள் நாயகம் இறந்த மாதம் ரம்ஜான் மாதமாக முஸ்லிம்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. புனித மாதமாக கருதும் அம்மாதம், 30 நாட்கள் பிறை தென்படுவது முதல் அடுத்த பிறையான ஈத் பிறை தென்படும் நாள் வரை முஸ்லிம்கள் நோன்பு இருந்து சிறப்பு தொழுகை செய்வது மரபு.
இதன்படி ரம்ஜான் மாதம் வரும், 24ல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும், 21ல் அமாவாசை தினம். எனவே, 22ம் தேதி சந்தேகத்துக்கு உரிய இரவு, அதாவது 'சக்குடையா இரவு' என முஸ்லிம்கள் கடைப்பிடிக்க உள்ளனர்.
அன்று இரவு பிறை தென்பட்டால், ரம்ஜான் சிறப்பு தொழுகை அன்று இரவு துவங்கும். அன்று முதல் தினமும் அதிகாலை, 4:20 மணிக்கு மேல் துவங்கி மாலை, 6:30 மணி வரை நோன்பு கடைப்பிடிப்பர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை பல்கலை
சிறப்பு தேர்வு எழுத அழைப்பு
ஈரோடு, மார்ச் 19-
அண்ணாமலை பல்கலை கழக, ஈரோடு படிப்பு மைய பொறுப்பு அலுவலர் ராஜகுமாரி வெளியிட்டுள்ள அறிக்கை:
அண்ணாமலை பல்கலை கழக தொலைதுார கல்வி வழியில் கடந்த, 2002 முதல், 2014 வரையிலான கல்வியாண்டில் படித்து தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு வரும் மே, முதல், டிச., 2023 வரை இரு பருவங்களில் சிறப்பு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். விருப்பம் உள்ள மாணவர்கள், www.coe.annamalaiuniversity.a.cin/bank/splddeapp.php என்ற பல்கலை கழக இணையதளத்தில் மார்ச், 31க்குள் பதிவு செய்ய வேண்டும்.
கடந்த, 2014க்கு பின் சேர்க்கை பெற்றுள்ள மாணவர்கள், ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரம் அறிய, 0424 2214787, 7514787 என்ற எண்ணில் பேசி அல்லது குறுஞ்செய்தி அனுப்பி விபரம் அறியலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மதுபாட்டில்கள் பறிமுதல்
நான்கு பேர் கைது
அந்தியூர், மார்ச் 19-
அந்தியூர் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில், சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக அந்தியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை சேர்ந்த பிரபு, 26, சந்துரு, 22, முஸ்தபா, 23, கார்த்தி, 32, என நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 43 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். கோபியில்
சாரல் மழை
கோபி, மார்ச் 19-
கோபியில் நேற்றிரவு திடீரென சாரல் மழை பெய்தது.
கோபி டவுன் பகுதியில், நேற்று மதியம் முதல் வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் நேற்றிரவு, 7:30 மணிக்கு திடீரென இடியுடன் சாரல் மழை பெய்தது. கோபி, புதுப்பாளையம், பஸ் ஸ்டாண்டு சாலை, பாரியூர் சாலை, முருகன்புதுார் உள்ளிட்ட பகுதியில், பத்து நிமிடம் மட்டுமே மழை நீடித்தது. அதன்பின், வானம் பலத்த இடியுடன், மேகமூட்டமாக காட்சியளித்தது.
பால் உற்பத்தியாளர் ஆர்ப்பாட்டம்
அந்தியூர், மார்ச் 19-
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் சார்பில், பவானி அருகே தளவாய் பேட்டையில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஏராளமான விவசாயிகள் கால்நடைகளுடன் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் கூறுகையில், 'மாட்டுப்பால் லிட்டர் ஒன்றுக்கு, 42 ரூபாய், எருமை பால் லிட்டர், 51 ரூபாய் என வழங்க வேண்டும், முழு காப்பீட்டு திட்டம் வழங்க வேண்டும், கால்நடை தீவனங்கள் 50 சதவீதம் மானியத்தில் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டம் நடக்கிறது' என்றனர்.