ஈரோடு: ஈரோடு வில்லரசம்பட்டி பகுதி, பெரியசேமூர், சீனகாடு, எஸ்.பி.பி.நகர் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட சாயக்கழிவு நீர், பிச்சைக்காரன்பள்ளம் ஓடையில் ஓடுகிறது.
ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஓராண்டுக்கு மேலாக கட்டுப்பாடற்ற வகையில் சாய, சலவை, பிரின்டிங் கழிவு நீர், சாக்கடை வடிகாலிலும், பிச்சைக்காரன்பள்ளம் ஓடையிலும் தொடர்ந்து திறந்து விடப்படுகிறது. அங்கிருந்து கழிவு நீர், காவிரி ஆற்றில் நேரடியாக கலக்கிறது.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் அவ்வப்போதாவது, கழிவு நீர் வெளியேற்றத்தை தடுப்பதும், ஆலைகளின் மின் இணைப்பு துண்டிப்பதும் நடந்தது. கடந்த ஓராண்டுக்கு மேலாக இதுபோன்ற நடவடிக்கைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு, ஆலைகள் முழு சுதந்திரத்துடன் சாயக்கழிவை வெளியேற்றி வருகின்றனர்.
இதன்படி நேற்று வில்லரசம்பட்டி பகுதியில் இயங்கி வரும் சாயப்பட்டறைகள், பிளீச்சிங் பட்டறைகளில் இருந்து பல ஆயிரம் லிட்டர் சாயக்கழிவு சாக்கடை வழியாக வெளியேற்றப்பட்டு, பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் நேற்று காலை முதல் தொடர்ந்து ஓடி வருகிறது. அடர் பச்சை, நீலம், சிவப்பு ஆகிய நிறங்களில் ஆன சாயக்கழிவு நீர் ஓடியதால், அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்தனர். வழக்கம்போல, மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்துக்கு புகார் தெரிவித்தும், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.