முத்துார்: முத்துாரில், வணிக வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து, கடைக்காரரிடம் பணம் வசூலித்த, இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் டி.ஆர். நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் முத்துார் பகுதியில், வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வணிக வரித்துறை அடையாள அட்டை அணிந்து சென்ற முதியவர் இருவர், தாங்கள் இருவரும் வணிக வரித்துறை அதிகாரிகள் என அறிமுகப்படுத்தியுள்ளனர். பின்னர் கடையின் வரவு, செலவு கணக்குகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து வழி செலவுக்கு, 700 ரூபாய் பெற்று சென்றுள்ளனர். இருவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த மணிகண்டன், அருகில் இருந்தவர்களின் உதவியோடு இருவரையும் பிடித்து வெள்ளகோவில் போலீசில்
ஒப்படைத்தார். விசாரணையில் அவர்கள் ஈரோடு, வளையக்கார வீதியை சேர்ந்த தங்கவேல், 62, ஈரோடு வணிக வரித்துறையில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றது தெரியவந்தது. மற்றொருவர் அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன், 59, என தெரியவந்தது.
இருவரையும் வெள்ளகோவில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.