வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: லண்டனில் நடந்த கருத்தரங்கில் பேசிய பேச்சு குறித்து பார்லிமென்ட் குழுவிடம் காங்கிரஸ் எம்.பி., ராகுல் விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது, அவர், ஜனநாயகம் குறித்து மட்டுமே கேள்வி எழுப்பினேன். அதனை தேச விரோதம் என முத்திரை குத்தக்கூடாது. வெளிநாட்டின் தலையீட்டை கோரவில்லை என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
டில்லியில் நேற்று வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்ந்த பார்லிமென்ட் ஆலோசனை குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் ராகுல் விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில், லண்டனில் இந்தியாவின் ஜனநாயகம் குறித்து மட்டுமே கேள்வி எழுப்பினேன். இதனை தேசவிரோதம் என முத்திரை குத்தக்கூடாது. இந்தியாவில், வேறு எந்த நாடும் தலையிட வேண்டும் என நான் கோரவில்லை. நான் பேசியது உள்நாட்டு விவகாரம் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. இவ்வாறு ராகுல் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக டில்லி வட்டாரங்கள் கூறியதாவது: இந்த கூட்டத்தில் முதலில் ராகுல் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. எம்.பி.,ஒருவர், ராகுலின் லண்டன் பேச்சு குறித்துகேள்வி எழுப்பியதை தொடர்ந்து அவர் விளக்கம் அளித்தார். இதற்கு பா.ஜ., எம்.பி., ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து பேசுவதற்கு இது சரியான இடமல்ல என்றார். இதற்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும், வேறு சிலர், தனது பேச்சு குறித்து விளக்கமளிக்க சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு ஆதரவு உள்ளதாக தெரிவித்தார்.

மற்றொரு பா.ஜ., எம்.பி.,ஒருவர் பேசும்போது, இந்தியாவில் அவசரநிலை பிரகடனம் என்பது, ஜனநாயகத்திற்கு விழுந்த பெரிய அடியாகும். ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளதை சிலர் திசைதிருப்ப முயற்சிக்கின்றனர் என்றார்.
இதனையடுத்து இந்த விவகாரத்தில் தலையிட்ட ஜெய்சங்கர், அனைத்து உறுப்பினர்களையும் சமாதானப்படுத்தியதுடன், இந்த விவகாரம் குறித்து இங்கு பேச வேண்டாம். அதற்கு சரியான இடம் பார்லிமென்ட் தான் எனக்கூறியதுடன், ராகுலையும், அவரது பேச்சு குறித்து பார்லிமென்டில் விளக்கமளிக்கும்படி கூறினார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.