கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, பாலாஜி நகரை சேர்ந்தவர் மோகன். கடந்த, 15ல் இவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், 50 பவுன் நகைகளை திருடிச் சென்றனர். இது தொடர்பாக எஸ்.பி., சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவுப்படி, டி.எஸ்.பி., தமிழரசி மேற்பார்வையில் டவுன் இன்ஸ்பெக்டர் கபிலன், எஸ்.ஐ., பிரபாகரன், எஸ்.எஸ்.ஐ., ராஜா, ஏட்டு சாரதி, போலீஸ் ஏழுமலை ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இவர்கள், திருட்டு நடந்த பகுதி, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், கிருஷ்ணகிரி தண்டேகுப்பத்தை சேர்ந்த சதீஷ்குமார், 25, நகைகளை திருடியதும், பின் கோவா சுற்றுலா சென்றதும் தெரிந்தது. உடனடியாக தனிப்படை போலீசார் கோவா சென்று, அங்கு பதுங்கியிருந்த சதீஷ்குமாரை, கைது செய்து, கிருஷ்ணகிரிக்கு அழைத்து வந்தனர்.
விசாரணையில் அவர், ஏற்கனவே கிருஷ்ணகிரி அடுத்த பெரியமோட்டூரில் சிவக்குமார் என்பவரின் வீட்டில், 17.5 பவுன், பழையபேட்டையில் அம்மு என்பவரது வீட்டில், 5 பவுன், காவேரிப்பட்டணம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பிலுள்ள தனலட்சுமி என்பவரின் வீட்டில், 7 பவுன் என, 30 பவுன் நகைகளை திருடியதையும் ஒப்புக்கொண்டார். அவற்றை, தன் நண்பர்களான திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த வைப்பூரை சேர்ந்த விக்ரம், விமல் ஆகியோரிடம் கொடுத்து வைத்திருந்ததாக கூறியுள்ளார். அங்கு சென்ற போலீசார், 32 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 80 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
சதீஷ்குமார் மீது, ஏற்கனவே கிருஷ்ணகிரி டவுன், தாலுகா, வேப்பனஹள்ளி, காவேரிப்பட்டணம், மகாராஜகடை உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தனித்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் சதீஷ்குமார், திருடிய நகைகளை விற்று, நண்பர்களுக்கு செலவு செய்வதையும், சுற்றுலா அழைத்து செல்வதையும் வழக்கமாக கொண்டவர் என, போலீசார் தெரிவித்தனர்.