ஓசூர்: ஓசூர், அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரியில், தமிழக காவல்துறை மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறையில் பணியாற்றுபவர்களின் வாரிசுகள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கு, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று துவங்கியது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து, 80 தனியார் நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான தொழிலாளர்களை தேர்வு செய்தன. மொத்தம், 4,291 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடந்தன. ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனியாக அரங்குகள் அமைத்து ஊழியர்களை தேர்வு செய்தன. டிகிரி மட்டும் படித்த மொத்தம், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, வேலைவாய்ப்பு முகாம் குறித்த கருத்தரங்கில், மாவட்ட எஸ்.பி., சரோஜ்குமார் தாக்கூர், வேலைவாய்ப்புத்துறை மண்டல இணை இயக்குனர் லதா, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அலுவலர் கவுரிசங்கர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலர் பன்னீர்செல்வம், தொழிலக பாதுகாப்பு துணை இயக்குனர் இளவரசி ஆகியோர் அறிவுரை வழங்கி, முகாமில் தேர்வானவர்களுக்கு, பணி நியமன ஆணைகளை வழங்கினர். இன்று, முகாம் நிறைவு பெறுகிறது.