நஞ்சு இல்லா உணவுகளை இளம் தலைமுறையினருக்குக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் பலரும் இயற்கை விவசாயம், இயற்கை முறையில் தோட்டங்கள் மற்றும் மாடித் தோட்டங்களை அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்படி ஆரம்பிக்கும் அனைத்து தோட்டங்களும் இறுதியில் எதிர்பார்த்த வெற்றியைத் தருகிறதா? என்ற கேள்விக்குப் பதில் கிடைப்பது குறைவு தான்.
இதற்கு ஆர்வத்தில் செடியை வைத்து வளர்க்க ஆரம்பிக்கும் நாம், அதற்குத் தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குவதில் குழப்பம் ஏற்பட்டு, இறுதியில் மகசூல் குறைவதால், முதல் முறை உள்ள ஆர்வம் படிப்படியாகக் குறையும். இதை தடுக்க, இயற்கை முறையில் தயாரிக்கப்படும் ஊட்டச்சத்து ஊக்கிகளை அறிந்து கொள்ள வேண்டும்.
இப்படி இயற்கை முறையில் விவசாயம் மற்றும் தோட்டங்கள் அமைப்பவர்களுக்குப் பயிர் ஆரோக்கியமாகவும், அதிக மகசூலும் கொடுக்கக் கூடிய மீன் அமிலத்தைத் தயாரித்துப் பயன்படுத்துவதன் மூலம் புது நம்பிக்கையும், ஆர்வமும் அதிகரிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மீன் அமிலத்தை வீட்டிலேயே எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
மீன் கழிவுகள் - 5கிலோ
நாட்டுச் சக்கரை - 6கிலோ
பெரிய பக்கெட்(வாளி) - 1
தயாரிக்கும் முறை
மீன் மார்க்கெட்டில் இருந்து வாங்கி வந்த மீன் கழிவுகளைச் சிறிய, சிறிய துண்டுகளாக நறுக்கி வாளியில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பிறகு நாட்டுச் சர்க்கரையை அதில் சேர்த்து நன்றாகக் குச்சியை வைத்துக் கிளற வேண்டும். பிறகு பிளாஸ்டிக் கவரால் காற்றுப்புகாத அளவிற்குக் கட்டி சுமார் 20 நாட்களுக்கு நிழல் பகுதியில் வைத்துவிட வேண்டும்.
குறிப்பாக மீன் வாடை வரும் என்பதால் 20 நாட்களுக்கு நாய், பூனைகளிடம் இருந்து பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
20 நாட்கள் கழித்துத் திறந்து பார்த்தால், மீன் வடை முழுவதும் போய் தேன் நிறத்தில் மீன் அமிலம் கிடைக்கும்.
200மிலி அமிலத்தில் 10லிட்டர் தண்ணீர் சேர்த்துப் பயிர் மற்றும் செடிகளில் தெளிக்க வேண்டும். இதுபோல் செய்யும் போது, மூன்று நாட்களில் பயிர் செழித்து வளரும், மகசூலும் அதிகரிக்கும்.
ஒருமுறை தயார் செய்யும் இந்த மீன் அமிலத்தை ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம். குறிப்பாக இந்த மீன் அமிலம் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.