தர்மபுரி: தர்மபுரியில் நேற்று, தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சு பணியாளர் அலுவலர் சங்க, மாநில உயர்நிலைக்குழு கூட்டம் நடந்தது. தர்மபுரி மாவட்ட தலைவர் அசோக்குமார் வரவேற்றார். மாநில தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜன் கோரிக்கைகள் குறித்து பேசினார்.
இதில், தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சு பணியில் பணியாற்றி வரும் இளநிலை உதவியாளர்கள், டைபிஸ்ட், சுருக்கெழுத்து டைப்பிஸ்ட்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். உதவியாளர் பதவி உயர்வு பெற்று, நான்காண்டுகள் கடந்தவர்களுக்கு விரைந்து பதவி உயர்வு ஆணை வழங்க வேண்டும். தமிழகத்தில் புதிதாக துவங்கப்பட்ட, 11 அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகள், புதிதாக துவங்கப்பட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில், இணை இயக்குனர் அலுவலங்களில் அமைச்சு பணியாளர்கள் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாநில பொதுச்செயலாளர்
முத்துரமேஷ், துணைத்தலைவர் குணசேகரன், பொருளாளர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் குமார், ராஜேந்திரன் உட்பட, பலர் பங்கேற்றனர்.