பாப்பிரெட்டிப்பட்டி: பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஸ்கேட்டிங் பயிற்சியாளரை, போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே எட்டாம் வகுப்பு படிக்கும், 13 வயது மாணவி ஸ்கேட்டிங் பயிற்சிக்காக, சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே கணவாய்புதுாரை சேர்ந்த சந்தோஷ்குமார், 26, என்பவரிடம் சென்று வந்துள்ளார்.
பயிற்சி முடிந்து தினமும் சந்தோஷ்குமார் தன் பல்சர் பைக்கில், மாணவியை அவரது வீட்டில் விட்டு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு சந்தோஷ்குமார், ஸ்கேட்டிங் போட்டிக்கு மாணவியை நாக்பூரூக்கு ரயிலில் அழைத்து சென்றுள்ளார். அப்போது மாணவிக்கு அவர் தாலி கட்டி, ஒரே அறையில் இருவரும் தங்கினர். மேலும், ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஊர் திரும்பிய பிறகும், ஸ்கேட்டிங் பயிற்சி கொடுக்கும் இடத்திலும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து, தன் தந்தையுடன், பொம்மிடி போலீசில் மாணவி புகார் கொடுத்தார். அதன்படி இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, ஸ்கேட்டிங் பயிற்சியாளர் சந்தோஷ்குமாரை போக்சோவில் கைது செய்தார்.