தர்மபுரி; தர்மபுரி நகராட்சி கமிஷனர் சித்ரா வெளியிட்டுள்ள அறிக்கை:
தர்மபுரி நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. இங்கு, ஏராளமான வீடுகள் மற்றும் வணிக, வர்த்தக
நிறுவனங்கள், அரசு கட்டடங்கள் உள்ளன. இதில், பலர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்டவற்றை செலுத்தாமல் உள்ளனர். இதையடுத்து நகராட்சி நிர்வாகம் எடுத்து வந்த தொடர் நடவடிக்கையால், 18 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள, 10 கோடி ரூபாயை வசூல் பணி நடக்கிறது. நிலுவை வரியை செலுத்த பலமுறை கால அவகாசம் வழங்கியும், பலர் வரியை செலுத்தாமல் உள்ளனர். இதனால், நகராட்சியில் வரியை செலுத்தாத குடியிருப்புக்கள், வணிக, வர்த்தக நிறுவனங்கள், அரசு அலுவலங்களின் குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பை துண்டிக்கும் பணி துவங்கியுள்ளது. இதை தவிர்க்க,
நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தி, நகராட்சி நிர்வாகத்துக்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.