News in few lines... Karur | செய்திகள் சில வரிகளில்... கரூர்| Dinamalar

செய்திகள் சில வரிகளில்... கரூர்

Added : மார் 19, 2023 | |
துவரம் பருப்பு உற்பத்திபணியில் தொழிலாளர்கள்பழையஜெயங்கொண்டம் பகுதியில், நாட்டு துவரம் பருப்பு உற்பத்தி பணியில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த பழையஜெயங்கொண்டம், லட்சுமணம்பட்டி, சேங்கல், புதுப்பட்டி ஆகிய இடங்களில் விவசாயிகள் மானாவாரி நிலத்தில் துவரை சாகுபடி செய்திருந்தனர். கடந்த மாதம் துவரை செடிகள் அறுவடை செய்து, செடிகளில் இருந்து

துவரம் பருப்பு உற்பத்தி
பணியில் தொழிலாளர்கள்
பழையஜெயங்கொண்டம் பகுதியில், நாட்டு துவரம் பருப்பு உற்பத்தி பணியில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த பழையஜெயங்கொண்டம், லட்சுமணம்பட்டி, சேங்கல், புதுப்பட்டி ஆகிய இடங்களில் விவசாயிகள் மானாவாரி நிலத்தில் துவரை சாகுபடி செய்திருந்தனர். கடந்த மாதம் துவரை செடிகள் அறுவடை செய்து, செடிகளில் இருந்து துவரை தரம் பிரிக்கப்பட்டது. தரம் பிரிக்கப்பட்ட துவரையை, நாட்டு துவரம் பருப்பு உருவாக்குவதற்கான பணிகளில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டு துவரம்பருப்பு உற்பத்தி செம்மண் கொண்டு தண்ணீர் கலவையில் கலந்து கலர் சேர்க்கப்படுகிறது. பின்னர் வெயிலில் உலர்த்தப்படுகிறது. உலர்த்தப்பட்ட துவரை அரவை மிஷினில் அரைக்கப்படுகிறது. இதில் நாட்டு துவரம்பருப்பு தனியாக பிரிக்கப்படுகிறது. இந்த துவரம்பருப்பு நல்ல தரமான சுவையுடன் இருக்கும். இந்த துவரம் பருப்பு கிலோ, 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


காமராஜ் தினசரி மார்க்கெட்
மதுபான கடையால்
போக்குவரத்து நெரிசல்
கரூர் காமராஜ் தினசரி மார்க்கெட் அருகே செயல்படும் மதுபான கடையால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கரூர் நகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த, காமராஜ் தினசரி மார்க்கெட், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே, டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இதனால், அப்பகுதியில் நாள் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள, மாரியம்மன் கோவிலுக்கு, மதுக்கடை செயல்படும் சாலை வழியாக பக்தர்கள் செல்ல வேண்டும். இதனால், அப்பகுதியில் குடிமகன்களால், பக்தர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்படுகிறது.
இதனால், காமராஜ் தினசரி மார்க்கெட் அமைந்துள்ள, மதுபான கடையை மூட வேண்டும் என்ற கோரிக்கை, வியாபாரிகள், பக்தர்கள், பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் தரப்பில் இருந்து எழுந்துள்ளது.

ஆடுகள் விற்பனை விவசாயிகள் மகிழ்ச்சி
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி, கிராமங்களில் விவசாயிகள் வீடுகளில் ஆடுகள் வளர்த்து வருகின்றனர். இந்த வளர்ப்பு ஆடுகளை வியாபாரிகள் நேரில் வந்து வாங்கி
செல்கின்றனர்.
இதனால் விவசாயிகள் அலைச்சல் இல்லாமல் ஆடுகள் விற்று வருகின்றனர். தற்போது, 5 கிலோ எடை கொண்ட கிடா ஆடு ஒன்று, 4,000 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டது. மேலும் கிராமங்களில் நல்ல தரத்துடன் ஆடுகள் கிடைப்பதால் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இதன் மூலம் விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைத்து வருகிறது.

நாளை மாற்றுத்திறனாளி
குறைதீர் கூட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம் நாளை (20) நடக்கிறது.
கரூர் கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கான குறைதீர் கூட்டம் நாளை, கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாலை, 3:30 மணிக்கு நடக்கிறது. எனவே, மாவட்டத்தில் உள்ள பஞ்., பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு, தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

சட்ட விரோத மது

விற்பனை: 5 பேர் கைது
கரூர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக மது விற்றதாக, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்ட, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் பசுபதி பாளையம், வேலாயுதம்பாளையம், தோகமலை, சிந்தாமணிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர்.
அப்போது, சட்ட விரோதமாக மது விற்றதாக பெரியக்காள், 66; லோக நாதன், 51; தமிழரசன், 34; ஈஸ்வரன், 45; தங்கதுரை, 50; ஆகிய, ஐந்து பேரை கைது செய்தனர்.

அப்பிபாளையம் கிராமத்தில்

21ல் மனுநீதி நாள் கூட்டம்
வரும், 21ல், அப்பிபாளையம் கிராமத்தில் மனுநீதி நாள் கூட்டம் நடக்கிறது என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகில், அப்பிபாளையம் கிராமத்தில் வரும், 21 மதியம், 3.00 மணியளவில் மனுநீதி நாள் முகாம் நடக்கிறது. இதில், பல்வேறு அரசு துறையை சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்று, துறை சார்பான நலத்திட்ட உதவிகள் பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைப்பர். மேலும் மருத்துவ முகாம், அரசுத்துறை சார்பாக கண்காட்சி ஆகியவை நடைபெற உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குட்கா விற்பனை: ஒருவர் கைது
அரவக்குறிச்சி அருகே, குட்கா பொருட்களை விற்றதாக, ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி போலீஸ் எஸ்.ஐ., பெரியசாமி உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் பள்ளப்பட்டி அலீசா நகர் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள, புகையிலை குட்கா பொருட்களை, பீடா கடையில் விற்றதாக அப்பாஸ் அலி, 40; என்பவரை,
அரவக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.

புதிய தார்ச்சாலை அமைக்க

நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
குளித்தலை நகராட்சியில் அவசரக்கூட்டம் தலைவர் சகுந்தலா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் கணேசன், கமிஷனர் மனோகரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், 'பஸ்ஸ்டாண்டு மேம்படுத்தும்பணி நடந்து வருகிறது. தரைக்கடைகளை தற்காலிகமாக சட்டப்படி அப்புறப்படுத்திவிட்டு, விரிவாக்கபணி மேற்கொள்ளுதல், புதிய கட்டண கழிப்பிடம் கட்டுதல், புறவழிச்சாலையில் தார்ச்சாலை பணி செய்தல், புதியதாக நவீன கட்டண கழிப்பிடம் கட்டுதல்' என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடக்கப்பள்ளி ஆசிரியர்
கூட்டணி உண்ணாவிரதம்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் பொன்னம்பலம் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
அதில், பழைய ஓய்வூதிய
திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், மாவட்ட கல்வி அலுவலகம்,
வட்டார கல்வி அலுவலகங்களில் உள்ள, காலி பணியிடங்களை
நிரப்ப வேண்டும் உள்ளிட்ட
பல்வேறு கோரிக்கைகள்
வலியுறுத்தப்பட்டன.
மாநில துணை செயலாளர் ஜெயராஜ், செயற்குழு உறுப்பினர் பார்த்திபன், மாவட்ட செயலாளர் மணிகண்டன், பொருளாளர் அமல்ராஜ், அரசு அலுவலர் ஒன்றிய, மாவட்ட தலைவர் பாரதிதாசன் உள்பட, 100 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியைகள் பங்கேற்றனர்.

எண்ணும் எழுத்தும்
விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
குளித்தலையில் நேற்று எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் வாகன பரப்புரை மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் உதவி திட்ட அலுவலர்கள் சக்திவேல் , சண்முக
வடிவு ஆகியோர் கொடியசைத்து துவக்கிவைத்தனர். தமிழக அரசின் திட்டமான எண்ணும் எழுத்தும் திட்டம் பற்றிய கலை நிகழ்ச்சி மூலம் பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

வரும் 24 ல் இலவச வெள்ளாடு
வளர்ப்பு பயிற்சி முகாம்
கரூர் அருகே, பண்டுதகாரன் புதுார் கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மை யத்தில் வரும், 24 ல் வெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சி நடக்கிறது.
அதில், ஆடுகளை தேர்வு செய்தல், தீவன பராமரிப்பு, ஆடுகளை தாக்கும் நோய்கள் மற்றும் தடுக்கும் முறைகள் ஆகிய, தலைப்பு களில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில், பங்கேற்க விரும்பும் விவசாயிகள் வரும், 24ம் தேதி காலை, 10:30 மணிக்கு ஆராய்ச்சி மையத் துக்கு வர வேண்டும். மேலும், விபரங்களுக்கு விவசாயிகள், 04324- 294335, 73390-57073 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை, கால்நடை ஆராய்சசி மையத்தின் தலைவர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறன் குழந்தைகளின்
பெற்றோருக்கு பயிற்சி
குளித்தலை, மார்ச் 19-
கடவூர் அடுத்த, தரகம்பட்டி யூனியன் நடுநிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில், மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பாதுகாவலருக்கான ஒரு நாள் பயிற்சி நடந்தது. கடவூர் வட்டார வளமையத்தின் மேற்பார்வையாளர் வரதராஜ், ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உள்ளடக்கிய கல்வித் திட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பேசப்பட்டது. ஆசிரியர் பயிற்றுனர் சித்ரா, சிறப்பு பயிற்றுனர்கள் சரஸ்வதி, சுமதி, அமராவதி, தசை பயிற்றுனர் சுதாசங்கர் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

1,212 மது பாட்டில் பறிமுதல்
வாலிபர் இருவர் கைது
புன்செய்புளியம்பட்டி, மார்ச் 19-
புன்செய்புளியம்பட்டி போலீசார், சத்தியமங்கலம் -- கோவை சாலையில் வாரச்சந்தை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த சரக்கு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த அட்டை பெட்டிகளில் டாஸ்மாக் மதுபானங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சரக்கு ஆட்டோவில் வந்த இருவரை பிடித்து விசாரித்தபோது ராமநாதபுரம் மாவட்டம் வஞ்சிக்கோட்டையை சேர்ந்த காளிமுத்து, 45, கோவை மாவட்டம் அன்னுாரை சேர்ந்த நாராயணன், 36, என தெரியவந்தது.
இவர்கள் இருவரும் அன்னுாரில் நடத்திவரும் ரெஸ்டாரன்டுக்கு டாஸ்மாக் மதுபானங்களை வாங்கிச் சென்று அங்கு கூடுதல் விலைக்கு விற்க முயற்சித்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டு, சத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடம் இருந்து, 180 மில்லி லிட்டர் அளவுள்ள, 1,056 பாட்டில்களும், 375 மில்லி லிட்டர் அளவுள்ள, 96 பாட்டில்களும், 650 மில்லி லிட்டர் அளவுள்ள, 60 பீர் பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X