கரூர்: மேட்டூர் அணையில் இருந்து, கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், மாயனுார் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு, 1,000 கன அடி தண்ணீர் காவிரியாற்றில் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு, 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 825 கன அடி தண்ணீர் வந்தது.
அந்த தண்ணீர் முழுவதும் காவிரியாற்றில், திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில், தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு, 512 கன அடியாக தண்ணீர் வந்தது.
அமராவதி அணை நிலவரம்
திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு, 170 கன அடி தண்ணீர் வந்தது.
ஆனால் குடிநீர் தேவைக்காக, அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 50 கன அடி திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 51.87 அடியாக இருந்தது.
நங்காஞ்சி அணை நிலவரம்
திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப் பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணை நீர்மட்டம் தற்போது, 38.88 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
ஆத்துப்பாளையம் அணை
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார் வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு வரத்து தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 13.90 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.