கரூர்: கரூரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த, நோ-பார்க்கிங் பகுதியில் வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்படுகின்றன. இதை போக்குவரத்து போலீசார், கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
கரூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியை சுற்றி, கோவை சாலை, திருச்சி சாலை, தின்னப்பா கார்னர் சாலை மற்றும் ஜவஹர் பஜார் சாலை உள்ளது. இந்த பகுதிகளில், வர்த்தக நிறுவனங்கள் அதிகளவில் உள்ளதால், காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள பெரும்பாலான ஜவுளி கடைகள், நகை கடைகள், பேன்சி ஸ்டோர்களுக்கு பார்க்கிங் வசதி செய்யப்படவில்லை.
இதனால், வியாபார நிறுவனங்களுக்கு வரும் வாகனங்கள் சாலைகளில் நிறுத்தப்படுகின்றன. இதனால், கரூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து, நோயாளிகளை அழைத்து செல்ல புறப்படும், 108 அவசரகால ஆம்புலன்ஸ் வாகனங்கள் அடிக்கடி நெரிசலில் சிக்குகின்றன. இதனால், நோயாளிகளை உரிய நேரத்தில் அழைத்து செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
மேலும், நோ-பார்க்கிங் என போலீசாரால் அறிவிக்கப்பட்ட பகுதிகளில், கார் உள்ளிட்ட வாகனங்களை, பலமணி நேரம் நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இதை கரூர் நகர போக்குவரத்து போலீசார், கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
இதனால், கரூர் நகரப்பகுதிகளில் நாள் தோறும் விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, கரூர் போக்குவரத்து போலீசார், கார் உள்ளிட்ட வாகனங்களை நோ-பார்க்கிங் பகுதிகளில் நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.