சமத்துவபுரம் சாலையில்
தெருவிளக்குகள் தேவை
கரூர் அருகே வெள்ளியணையில் சமத்துவபுரம் உள்ளது. இதில்,
100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சமத்துவபுரத்தில் போதிய கழிப்பிட வசதி இல்லை. மேலும், பஸ் ஸ்டாப்பில் இருந்து சமத்துவ
புரம் செல்லும் சாலையில், தெரு விளக்குகள் இல்லை. இதனால்,
அப்பகுதி வழியாக இரவு நேரத்தில், இருசக்கர வாகனத்தில் கூட செல்ல முடியவில்லை. பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளின் நடமாட்டம், அந்த சாலையில் அதிகளவில் உள்ளது. இதனால், வெள்ளியணை பஸ் ஸ்டாப்பில் இருந்து, சமத்துவபுரம் செல்லும் சாலையில், தெரு விளக்குகள் அமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயணிகள் நிழற்கூடம்
அமைக்கப்படுமா?
கரூர் அருகே, வெங்ககல்பட்டியில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஆனால், அந்த பகுதியில் பயணிகள் நிழற்கூடம் இல்லை. பலமுறை கோரிக்கை வைத்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பஸ்சுக்காக காத்திருக்கும் போது மழையிலும், வெயிலிலும் நீண்ட நேரம் நின்று கொண்டு அவதிப்படு கின்றனர். எனவே, வெங்ககல்பட்டி பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் அமைக்க வேண்டும். மேலும், அப்பகுதியில், அதிகளவில் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்வதால், வெள்ளைகோடுகளுடன் கூடிய வேகத் தடைகளும் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சாக்கடை வாய்க்காலை
துார்வார வேண்டுகோள்
கரூர்-சேலம் பழைய சாலை வெங்கமேடு மார்க்கெட் பகுதியில்,
சாக்கடை வாய்க்கால் செல்கிறது. இதை சுற்றியுள்ள பகுதியில் அதிகளவில் குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் சாக்கடை வாய்க்காலில், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை அதிகளவில் தேங்கியுள்ளது. மண் மேடுகளும் ஏற்பட்டுள்ளதால், கழிவு நீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. மேலும், மழைக்காலங்களில் மழைநீர், சாலையில் செல்லும் நிலை ஏற்படும். இதனால் ஏற்படும் சுகாதார கேட்டை தடுக்க, தினசரி மார்க்கெட் பகுதியில் செல்லும்,
வாய்க்காலை துார்வாரி தேங்கியுள்ள கழிவு பொருட்களை அகற்ற,
கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.