ராசிபுரம்:
தொட்டியப்பட்டி அரசு பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ராசிபுரம் அடுத்த தொட்டியப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில், 32 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியை உள்பட, 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இரு தினங்களுக்கு முன், 2 ஆசிரியர்களும் ஆசிரியர்களுக்கான கூட்டத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. இதனால் அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி அரசு பள்ளி ஆசிரியர் மணிகண்டன் தற்காலிக பணியாக தொட்டியப்பட்டி பள்ளிக்கு சென்றார். அப்போது, 3ம் வகுப்பு மாணவர் ஒருவரை முட்டி போட சொன்னதாகவும், குப்பைகளை அள்ளி அவரது பையில் போட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, மாணவனின் தாய், ராசிபுரம் போலீசில் அளித்த புகார்படி, நேற்று முன்தினம், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி பாலசுப்ரமணியன், வட்டார கல்வி அலுவலர் அருள்மணி, எஸ்.ஐ., தங்கம் உள்ளிட்டோர், தொட்டியப்பட்டி அரசு பள்ளியிலும், ஆசிரியர் மணிகண்டனிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.