நாமக்கல்: நாமக்கல் அருகே, 6.93 கோடி ரூபாய் மதிப்பில் திட்டப்பணிகளை, எம்.பி., ராஜேஸ்குமார் துவக்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம், நாமக்கல் ஒன்றியம், வேட்டாம்பாடி பஞ்சாயத்தில், மோகனுார் -நாமக்கல் - சேந்தமங்கலம் - ராசிபுரம் இணைப்பு சாலையை, இருவழி தடத்திலிருந்து அகலப்படுத்தி, பல வழித்தடமாக மாற்றவும், மழைநீர் வடிகால் அமைத்து, தடுப்பு சுவர் மற்றும் பாலங்கள் கட்டவும், தமிழக நெடுஞ்சாலைத்துறை மூலம், 6 கோடியே, 5 லட்சத்து, 60 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி அளிக்கப்பட்டது.
மேலும், வேட்டாம்பாடி பஞ்.,க்கு, புதிய கிராம செயலக அலுவலக கட்டடம் கட்ட, 42.65 லட்சம் ரூபாய், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 45.31 லட்சம் ரூபாய் மதிப்பில், 11 புதிய திட்டப்பணிகளுக்கு, நிதி ஒதுக்கீடு செய்தும் அனுமதி வழங்கப்பட்டது. அதையடுத்து, திட்டப்பணிகள் துவக்க விழா, நாமக்கல் அடுத்த வேட்டாம்பாடி அருகே, நேற்று நடந்தது. நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம் தலைமை வகித்தார். எம்.பி., ராஜேஸ்குமார், பூமி பூஜை செய்து, திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். நாமக்கல் தெற்கு நகர செயலாளர் ஆனந்த் உள்பட பலர் பங்கேற்றனர்.