மோகனுார்: 'மத்திய அரசு அறிவித்துள்ள கூடுதல் விலையிலிருந்து, மாநில அரசு சிறப்பு ஊக்கத்தொகையாக, டன் ஒன்றுக்கு, 195 ரூபாய் வழங்கியது. அவற்றை வரும் அரவை பருவத்துக்கு, 500 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், மோகனுார் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கரும்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் நவலடி, கரும்பு பெருக்க அலுவலர் சுப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆலையின் மேலாண் இயக்குனர் மல்லிகா தலைமை வகித்து பேசியதாவது:
முடிந்த அரவை பருவத்தில், 1.94 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டது. அதன் மூலம், 8.72 சதவீதம் சராசரி சர்க்கரை கட்டுமானம் பெறப்பட்டது. 2022, டிச., 31 வரை கரும்பு, 'சப்ளை' செய்த விவசாயிகள் அனைவருக்கும், நிலுவை தொகையின்றி, கொள்முதல் விலை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த, ஜன., பிப்., மாதத்தில் ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்பிய விவசாயிகளுக்கு, டன் ஒன்றுக்கு, 2,000 ரூபாய் முன்பணம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 821.25 ரூபாய், இம்மாதம் இறுதிக்குள் வழங்கப்படும். வரும், 2023-24ம் அரவை பருவத்தில், 2.20 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதற்காக, இதுவரை, 3,500 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 1,000 ஏக்கர் கரும்பு பதிவுக்கு எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, மத்திய அரசு அறிவித்துள்ள கூடுதல் விலையிலிருந்து, மாநில அரசு சிறப்பு ஊக்கத்தொகை, டன் ஒன்றுக்கு, 195 ரூபாய் வழங்கியது. அவற்றை வரும் அரவை பருவத்துக்கு, 500 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.
நடவு மானியம், நான்கு அடி பாருக்கு, இயந்திரம் மூலம் அறுவடை செய்வதற்கு, ஏக்கருக்கு, 8,500 ரூபாய் வழங்கப்படுகிறது. அவற்றை, சாதாரண நடவுக்கும், ஏக்கருக்கு, 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். வரும் அரவை பருவத்தில், வெட்டுக்கூலியை நிர்ணயம் செய்வதற்கு, விவசாயிகள், ஆலை நிர்வாகம், இயந்திர உரிமையாளர்கள் அடங்கிய கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள், விவசாயிகள் தரப்பில் வைக்கப்பட்டது.
மேலும், சர்க்கரை ஆலையில், 15 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில், இணை மின் உற்பத்தி திட்டத்தை துவக்கிய, தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. ஆலையின் துணை தலைவர் ரசாயனர் சந்திரசேகர், துணை தலைவர் பொறியாளர் செங்குட்டுவன், தொழிலாளர் நல அலுவலர் தியாகராஜ், விவசாய சங்க பிரதிநிதிகள் வரதராஜன், குப்புராஜ், மணிவண்ணன், எட்டிக்கன் உள்பட பலர் பங்கேற்றனர்.