இசைக் கருவிகளில் மெல்லிசை தவழவிடும் வயலின், வீணை கடின இதயங்களையும் வருடி மென்மையாக்கிவிடும். ஆனால் அதிரடி இசையால் இளசுகளை ஆட்டம் போட வைப்பது 'டிரம்ஸ்' தான். அதனால் கச்சேரிகளில் இந்த கருவிக்கென கைதட்டும் அளவு தனி மரியாதை உண்டு. இதனை பெரும்பாலும் ஆண்களே கைவித்தை காட்டி அனைவரையும் ஆடவிடுவர். ஆனால் மதுரையை சேர்ந்த பதினாறு வயது மங்கை கெத்சியா சலோமி, இதனை இசைப்பதில் காட்டும் நளினமும், சாகசமும்... 'கண்' கொள்ளா... 'காது' கொள்ளா சாட்சியாக உள்ளது.
திருப்பாலையில் வசிக்கும் ஜார்ஜ்முல்லர் மகளான சலோமி, பக்குவமடையா வயதிலும் பங்கேற்கும் கச்சேரிகளில் பார்வையாளர்களை தன்வயப்படுத்தி விடுகிறார்.
அவரது தந்தை ஒரு கருப்பட்டி வியாபாரி. தாய் கிரேஸ் ஆசிரியையாக இருந்தவர். இந்தச் சின்ன வயதிலும் கச்சேரிகளுக்கு 'கால்ஷீட்' கொடுக்க இயலாத அளவுக்கு 'பிஸி'யாக உள்ளார். நான்காம் வகுப்பு படிக்கையில் அவர் போட்ட தாளம் தந்தையை தலையாட்ட வைத்தது. கடனுக்கு கருவி வாங்கி மகளின் திறமைக்கு உரம் கொடுத்தார்.
பள்ளி விழாவில் வாய்ப்பு தர மறுத்த முதல்வரிடம், திறமையை காட்டியதும் கைதட்டி ரசித்தது ஆசிரியர் குழு. உடனே வாய்ப்பு அளித்தனர். ஒரு திருமண நிகழ்ச்சியில் சிறுமியின் திறமை கண்ட மணமகளின் தந்தை, பரிசுப்பொருட்கள் அனைத்தையும் சலோமியிடமே வழங்கியது தந்தைக்கு ஆனந்த கண்ணீரை வரவழைத்தது.
அதன்பின் ஓ.சி.பி.எம்., பள்ளிக்கு சென்ற அளவு, இசை நிகழ்ச்சிக்கும் செல்லத் துவங்கினார். மாதம் 20, 25 நாட்களுக்கு மேல் மதுரை, கோவை, சென்னை என வாய்ப்பு கிடைத்ததால், 10ம் வகுப்புக்கு பள்ளி செல்வதையே நிறுத்திவிட்டு, பிரைவேட்டாக படித்துக் கொண்டே, நிகழ்ச்சிகளுக்கும் செல்கிறார். அவரது வருமானத்தால் திருப்பாலையில் ஸ்டூடியோ துவங்கி விரும்புவோருக்கு பயிற்சி அளிக்கிறார்.
'லண்டன் டிரினிட்டி' இசைக் கல்லுாரியின் 8ல் 6 கிரேடுகளை வெல்வதில் சிறப்பிடம் பெற்றுள்ளார். வரும் டிசம்பருக்குள் 'டிப்ளமோ' பெற காத்திருக்கிறார். தனியார் நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் துாதராக வந்துள்ளார்.
டிரம்ஸில் குச்சியால் வேகமாக தட்டி, உருட்டி அதிக 'பீட்' (அடி)களால் சபையை அதிரவிடுவதில் வல்லவர் இவர். 'ஹை கேட்' (தட்டு போன்ற கருவி)யையும், எலக்ட்ரானிக் 'பேட்' என்ற கருவியிலும் புகுந்து விளையாடுகிறார். நான்கு வினாடிகளில் 80 முறை உருட்டி தட்டி அதிரடி காட்டுவேன் என்கிறார். உலகளவில் ஒரு நிமிடத்தில் 1200 'பீட்'கள் சாதனையாக உள்ளது. இதனை முறியடிக்க வேண்டும் என்கிறார் சலோமி.
அவர் கூறியதாவது: சிறுவயதிலேயே இசை ஈர்ப்பு இருந்தது. அதற்கு வாய்ப்பு தந்ததால் இந்த நிலைக்கு வந்துள்ளேன். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், வெளிநாட்டுக் குழுக்களில் இடம் கிடைக்கும் அளவு, நல்ல 'டிரம்மர்' ஆக விரும்புகிறேன். தந்தையால் அடையாளம் காணப்பட்ட எனக்கு 'மதுரை மேஸ்ட்ரோ' குழு சைமன் அதிக வாய்ப்பளித்தார். என்னுடன் வழிகாட்ட என் தந்தை வியாபாரத்தை அம்மாவிடம் ஒப்படைத்துவிட்டார். ஏப்.14ல் பெங்களூரில் நிகழ்ச்சி முடிந்து மறுநாள் பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வை எழுத உள்ளேன், என்றார்.
இவரை 97881 47585ல் வாழ்த்தலாம்.