பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் ஒன்றியம், பாப்பம்பாளையம் பஞ்., அப்பநாய்க்கன்பாளையத்தில், ஏழு கோடி ரூபாயில் உயர்மட்டம் பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் அந்த இடத்தில் பதிக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய் சேதமடைந்ததால், கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் குழாயை சரிசெய்து, சீராக குடிநீர் வழங்க மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதுகுறித்து, பாப்பம்பாளையம் பஞ்., தலைவர் ஜெயவேல் கூறியதாவது:
குடிநீர் குழாய் உடைந்தது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், நேற்று, போராட்டம் நடத்த முடிவு செய்தோம். இதையறிந்த மாவட்ட கவுன்சிலர் செந்தில், தற்காலிக குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். பாலம் அமைக்கும் பணி முடிந்த பின், நிரந்தரமாக குடிநீர் குழாய் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.