அரூர்: கம்பைநல்லுார் அருகே, ஏரிக்கரையில் ஏறிய ஆண் யானை மின்கம்பியில் உரசியதில், மின்சாரம் தாக்கி பலியானது. தொடரும் இதுபோன்ற சம்பவங்களால், வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், மக்னா யானை மற்றும் 27 வயது ஆண் யானை என இரண்டு யானைகள் சுற்றித்திரிந்தன. இதில் மக்னா யானையை, கும்கி யானை உதவியுடன் பிடித்து முதுமலைக்கு கொண்டு சென்றனர். ஆண் யானை மட்டும் பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பிக்கிலி பகுதிகளில் சுற்றித்திரிந்தது.
நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு பாப்பாரப்பட்டி பகுதியிலிருந்து யானை வெளியேறியது. இதை பாலக்கோடு வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். நேற்று அதிகாலை, கிருஷ்ணாபுரம் ஏரியில் முகாமிட்டது. தொடர்ந்து, திப்பம்பட்டி கூட்ரோடு வழியாக, வகுரப்பம்பட்டி, பெரிசாகவுண்டம்பட்டி, இ.பி. மோட்டூர், ஜடையன்கொட்டாய் என பல்வேறு கிராமங்களில் சுற்றித்திரிந்த யானை, கம்பைநல்லுார் அடுத்த கெலவள்ளியில் தென்னந்தோப்பு வழியாக சென்றது. காலை, 9:32 மணிக்கு கஸ்துாரி என்பவரது விவசாய நிலத்திலிருந்து ஏரிக்கரையின் மீது ஏறும்போது, தாழ்வாக சென்ற மின்கம்பியில் யானை உரசியது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானது.
இறந்த யானையை வனத்துறை டாக்டர் பிரகாஷ் தலைமையிலான குழுவினர், அங்கேயே பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர். மண்டல வனப்பாதுகாவலர் பெரியசாமி, கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி தலைமையிலான வனத்துறையினர் விசாரணை
மேற்கொண்டனர்.
தொடரும் பலி
தர்மபுரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக யானை நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் கடந்த, 6ல் மாரண்டஹள்ளி அடுத்த காளிகவுண்டன் கொட்டாயில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி, மூன்று யானைகள் பலியாகின.
தொடர்ந்து, நேற்று மீண்டும் ஒரு ஆண் யானை மின்சாரம் தாக்கி இறந்துள்ளது. இதன்படி, 12 நாட்களில், நான்கு யானைகள் பலியாகி உள்ளன. தொடரும் சம்பவங்களால் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு பாப்பாரப்பட்டியில் துவங்கிய, இந்த ஆண் யானையின் பயணம், நேற்று காலை, 9:32 மணிக்கு கெலவள்ளியில் முடிவுக்கு வந்தது. மொத்தம், 17:30 மணி நேரம் எங்கும் நிற்காமல், யாருக்கும் பாதிப்பு கொடுக்காமல், 30 கி.மீ., துாரம் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.
உயர்த்தப்பட்ட ஏரிக்கரை
சில மாதங்களுக்கு முன், 100 நாள் உறுதி திட்டத்தில் கெலவள்ளி ஏரி துார்வாரப்பட்டது. அப்போது, மண் கொட்டி ஏரிக்கரை உயர்த்தப்பட்டது. கரையிலிருந்து, எட்டடி அடி உயரத்தில் மிகவும் தாழ்வாக மின்கம்பி சென்றதே யானையின் இறப்புக்கு காரணமாக அமைந்து விட்டது. இறந்த யானையை பார்த்து சுற்று வட்டார கிராம மக்கள் சோகமடைந்து, கண்ணீர் வடித்து இறுதிச் சடங்கு செய்தனர்.