வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ராகுல் வீட்டிற்கு வந்த டில்லி போலீசார் பாரத் ஜோடோ யாத்திரையின் போது, பாலியல் குறித்து அவர் பேசிய கருத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

ராகுல் நடத்திய பாரத ஒற்றுமை யாத்திரையின் போது, பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண் ஒருவர் தன்னிடம் வந்து பேசி, பல விபரங்களை தெரிவித்ததாக ராகுல் காஷ்மீரில் பேசினார். பாதிக்கப்பட்ட பெண் குறித்த விபரங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ளும்படி ராகுலுக்கு டில்லி போலீசார் 'நோட்டீஸ்' அளித்தனர்.
இதற்கு ராகுல் பதில் அளிக்காத நிலையில், தற்போது அவரது இல்லத்திற்கே நேரில் சென்று, டில்லி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையறிந்த, காங்., தொண்டர்கள் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாருக்கும் காங்., தொண்டருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

டில்லி போலீஸ் சட்ட ஒழுங்கு சிறப்பு கமிஷனர் பீர் ஹூடா கூறுகையில், மார்ச் 15ம் தேதி அன்றே ராகுலை தொடர்பு கொள்ள முயற்சித்தோம், ஆனால் எங்களை அவர் சந்திக்கவில்லை. பதில் தராததால், நேரில் வந்து அவரிடம் விசாரிக்கிறோம். அவரிடம் பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை கேட்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து காங்., சார்பில் வெளியிட்ட அறிக்கை: யாத்திரை முடிந்து 45 நாள் கழித்து ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதை நாங்கள் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம். ஜனநாயகம், பெண்கள் மேம்பாடு, கருத்து சுதந்திரம், எதிர்க்கட்சி ஆகியவற்றை பலவீனமாக்கவே அரசு இதை செய்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டது.