வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருப்பூர்: தினமலர் செய்தி எதிரொலியாக, திருப்பூரில் உதயநிதியின் திரைப்படத்துக்காக வைத்திருந்த 'பிளக்ஸ்'களை தி.மு.க., வினர் அகற்றினர்.

தி.மு.க., தலைமை சமீபத்தில் கட்சி சார்பில், பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையில், இடையூறாகவும் 'பிளக்ஸ்', 'கட்அவுட்' போன்றவைகளை வைக்க கூடாது என உத்தரவிட்டது. இந்த உத்தரவை இன்னமும் கட்சியினர் முழுமையாக பின்பற்றியதாக தெரியவில்லை. மீண்டும், இதனை நினைவூட்டும் வகையில் தி.மு.க., வினர் பிளக்ஸ் வைக்க கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்., பாரதி தெரிவித்திருந்தார்.
இச்சூழலில், கட்சி தலைமையின் உத்தரவை மீறி, திருப்பூர் மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளில் அமைச்சர் உதயநிதியின் புதிய திரைப்படம் தொடர்பாக புஷ்பா தியேட்டர் மேம்பாலம், டவுன்ஹால், ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் பிளக்ஸ் வைத்தனர். பின், கட்சியின் பெயரை மட்டும் மறைத்தனர்.

பிளக்ஸ் ஒன்றில், குருஷேத்திர போரில் பங்கேற்கும் அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் தேர் ஓட்டும் நிகழ்ச்சியை மையமாக வைத்து ஸ்டாலினை அர்ஜூனனாகவும், உதயநிதியை கிருஷ்ணராகவும் சித்தரித்த காட்சி இடம்பெற்றிருந்தது. மக்கள் மத்தியில் ஹிந்து மதத்தை கேலி செய்வது போன்று இருந்த காரணத்தால் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பான செய்தி, போட்டோவுடன் தினமலர் நாளிதல் மற்றும் தினமலர் வெப்சைட்டிலும் வெளியானது. அதன் எதிரொலியாக, கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த அனைத்து 'பிளக்ஸ்'களையும் தி.மு.க., வினர் அகற்றினர்.