வட்டி விகித பலனை மட்டும் அல்லாமல், பாதுகாப்பு, தனிப்பட்ட வசதி உள்ளிட்ட அம்சங்களையும் வைப்பு நிதி முதலீட்டில் பரிசீலிக்க வேண்டும்.
வங்கி வைப்பு நிதி பரவலாக நாடப்படும் முதலீடு வாய்ப்பாக இருக்கிறது. குறிப்பாக அதிக இடர் விரும்பாத முதலீட்டாளர்கள், வைப்பு நிதி முதலீட்டையே அதிகம் நாடுகின்றனர். வைப்பு நிதி பாதுகாப்பான முதலீடாக அமைவதோடு, எளிமையான முதலீடாகவும் விளங்குகிறது.
வர்த்தக வைப்பு நிதி வாய்ப்புகள் இருந்தாலும், பெரும்பாலானோர் வங்கிகளிலேயே வைப்பு நிதி வசதியை நாடுகின்றனர்.
எனினும், வைப்பு நிதிக்கு சரியான வங்கியை தேர்வு செய்வது அவசியம். வட்டி விகிதம் தவிர, மேலும் பல அம்சங்களையும் இதற்காக பரிசீலிக்க வேண்டும்.
வட்டி விகிதம்
பொதுவாக வைப்பு நிதி முதலீட்டை தீர்மானிக்கும் போது, பெரும்பாலானோர் வட்டி விகித பலனையே முக்கிய அம்சமாக பார்க்கின்றனர். இதற்காக பல்வேறு வங்கிகள் அளிக்கும் வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை ஒப்பிட்டு பார்ப்பது அவசியம்.
மூத்த குடிமகன்களுக்கு கூடுதல் சலுகையும் அளிக்கப்படுகின்றன. அதிக வட்டி அளிக்கும் வங்கியை தேர்வு செய்வது ஏற்றதாக இருக்கும். தற்போது வட்டி விகிதம் ஏறுமுகத்தில் இருப்பதால், சராசரியாக வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் ஈர்ப்புடையதாக அமைந்துள்ளது. பெரிய வங்கிகளை விட சிறிய வங்கிகள் அதிக வட்டி விகிதம் அளிக்கின்றன.
எனினும், வைப்பு நிதி முதலீட்டில் வட்டி விகித பலனோடு இடர் அம்சம் மற்றும் பாதுகாப்பு அம்சமும் முக்கியம். சிறிய வங்கிகள் அதிக வட்டி விகிதம் அளித்தாலும், இடர் அம்சமும் அதிகமாக இருக்கலாம். பெரிய வங்கிகள் பாதுகாப்பானவையாக கருதப்படுகின்றன.
எனவே, சிறிய வங்கிகளை தேர்வு செய்யும் போது இடர் அம்சத்தையும் மனதில் கொள்ள வேண்டும். வங்கிகள் நெருக்கடிக்கு உள்ளாகும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், பாதுகாப்பு அம்சத்தையும் முக்கியமாக கருத வேண்டும்.
இதர பலன்கள்
பெரிய வங்கிகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பொருளாதார சூழலை சமாளிக்கும் திறன் கொண்டவையாக கருதப்படுகின்றன.
வைப்பு நிதி முதலீட்டில் தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் மற்றும் வசதிகளும் முக்கிய அம்சமாக அமைகின்றன. பெரிய வங்கிகள் தன்மையை விரும்புகிறவர்கள் அவற்றை நாடலாம்.
அதே நேரத்தில் தனிப்பட்ட கவனத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு மற்றும் உள்ளூர் வர்த்தகத்தை ஆதரிக்க விரும்புகிறவர்களுக்கு சிறிய வங்கிகள் ஏற்றதாக அமையலாம்.
பலரும் தங்கள் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வங்கியிலேயே வைப்பு நிதி முதலீடு செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இது ஏற்றதாகவும் அமையலாம். எனினும், மற்ற வங்கி வைப்பு நிதி சாதகமான கூடுதல் பலனை அளிக்கும் என்றால், அவற்றை பரிசீலிக்கலாம்.
வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் அளிக்கும் வைப்பு நிதிகளையும் பரிசீலிக்கலாம். ஆனால், அவற்றின் பாதுகாப்பிற்கான 'ரேட்டிங்' அம்சங்களை கவனிக்க வேண்டும். முதலீட்டாளர்களின் இடர் தன்மையையும் மனதில் கொள்ள வேண்டும்.
வைப்பு நிதிக்கான கால அளவு, நிதி இலக்குகள் உள்ளிட்ட அம்சங்களையும் பரிசீலிக்க வேண்டும். வைப்பு நிதியை மொத்தமாக முதலீடு செய்யாமல், ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் பிரித்து மேற்கொள்வது, பரவலாக்கத்தின் பலனையும், பாதுகாப்பையும் அளிக்கும்.