இந்தியா இளம் வயதினரை அதிகம் கொண்ட தேசமாக அமைகிறது. நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள், 30 வயதுக்கு குறைவான வயது கொண்டிருப்பதாக தேசிய குடும்ப சுகாதார அறிக்கை தெரிவிக்கிறது.
இளம் தலைமுறையினர் நிதி விஷயத்தில் அதிக விழிப்புணர்வு கொண்டிருந்தாலும், மருத்துவ காப்பீடு என்று வரும் போது சுணக்கம் காட்டுகின்றனர். மருத்துவ பணவீக்கம் அதிகரித்து வரும் சூழலில், இளம் நுகர்வோர் மருத்துவ காப்பீட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து இருப்பதோடு, இளம் வயதில் காப்பீடு பெறுவதன் சாதகங்களையும் அறிந்திருக்க வேண்டும்.
உடனடி அவசியம்:
இளம் தலைமுறையினர் பலரும், மருத்துவ காப்பீட்டை உடனடி தேவையாக கருதாமல் தள்ளிப் போடும் தன்மை கொண்டுள்ளனர். எனினும், தாமதமாக காப்பீடு பெறுவது தவிர்க்க வேண்டிய ஒன்று என்பதோடு, இளம் வயதிலேயே 'பாலிசி' பெறுவது பல்வேறு அனுகூலங்களை கொண்டுள்ளது.
குறைந்த பிரீமியம்:
மருத்துவ பாலிசிகளுக்கு கட்டாய காத்திருப்பு காலம் உண்டு. அதன் பின்னரே கோரிக்கைகளை சமர்ப்பிக்க முடியும். இளம் வயதினருக்கு இதை தவிர்க்கலாம் என்பதோடு, குறைந்த பிரீமியத்தில் அதிக பாதுகாப்பை பெறலாம். நோய் பாதிப்புக்கான வாய்ப்பு குறைவு என்பதால் கிடைக்கும் சாதகங்கள் இவை.
சிகிச்சை செலவு:
மருத்துவ காப்பீடு பாலிசிகள் மேம்பட்டு வருகின்றன. மருத்துவமனை சிகிச்சை மட்டும் அல்லாமல், மருத்துவ சோதனை, தொலை மருத்துவம் உள்ளிட்டவற்றையும் பாலிசிகள் 'கவர்' செய்கின்றன. வெளிப்புற நோயாளி சிகிச்சை வசதி மூலம் இந்த செலவுகளை சமாளிக்கலாம். இது, இளம் வயதினருக்கு ஏற்றதாக அமையும்.
பரிசு புள்ளிகள்:
மருத்துவ காப்பீடு பாதுகாப்பை அளிப்பதோடு, ஆரோக்கியத்திற்கான ஊக்கமாகவும் அமையலாம். பாலிசிகளை புதுப்பிக்கும் போது, ஆரோக்கியத்திற்கான பரிசு புள்ளிகளும் காப்பீடு நிறுவனங்களால் அளிக்கப்படுகின்றன. ஒரு சில நிறுவனங்கள் பிரீமியத்திலும் சலுகை அளிக்கின்றன.
மகப்பேறு செலவுகள்:
இளம் தம்பதிக்கு, கர்ப்ப கால செலவுகளை உள்ளடக்கிய பாலிசி பெறுவது பொருத்தமாக இருக்கும். மகப்பேறு செலவுகளை இது ஈடுகட்டும். எனவே, எதிர்கால பாதுகாப்பிற்கு தேவையான அம்சங்களை கொண்ட பாலிசியை இளம் வயதிலேயே பெறுவது அதற்கேற்ற பலனை அளிக்கும். பாலிசி தொடர்பான விதிகள், நிபந்தனைகளையும் கவனிக்க வேண்டும்.