தேசிய பென்ஷன் திட்டமான, என்.பி.எஸ்., திட்டத்திலிருந்து பணத்தை விலக்கிக் கொள்வதற்கான புதிய விதிமுறையை, பென்ஷன் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் கொண்டு வந்துள்ளது.
சம்பளம் பெறும் ஊழியர்கள் மற்றும் சுய வேலை செய்பவர்கள் என, இரு தரப்பினருக்கும் ஈர்ப்புடைய பென்ஷன் திட்டமான என்.பி.எஸ்., தொடர்பான நடைமுறைகள் மேலும் எளிதாக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் திட்டத்தில் இருந்து விலகிக் கொள்ள விரும்பும் உறுப்பினர்கள், பணத்தை விலக்கிக் கொள்வதை எளிதாக்கும் புதிய விதிமுறை வரும் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
திட்டத்தில் இருந்து விலகிக் கொண்டு ஆண்டளிப்பு பெற விரும்பும் உறுப்பினர்கள், விலக்கல் அல்லது கே.ஒய்.சி., ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என புதிய விதிமுறை தெரிவிக்கிறது.
விலகல் விண்ணப்பத்துடன், அடையாள சான்றிதழ், வங்கி கணக்கு நிரூபணம், நிரந்தர ஓய்வு கணக்கு எண் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த விண்ணப்பம், ஆண்டளிப்பு விண்ணப்பமாகவும் கருதப்படும் என்பதால், தொகையை விலக்கிக் கொள்வதோடு, ஆண்டளிப்பை பெறுவதும் எளிதாக அமையும். புதிய விதிமுறை, என்.பி.எஸ்., செயல்பாட்டை மேலும் எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.