காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊராட்சி வரி இனங்களை, 'ஆன்லைனில்' பதிவேற்றாமல்
ஊரக வளர்ச்சித் துறையினர் மெத்தனம் காட்டி வருகின்றனர். பதிவேற்றும் பணி
முழுமையடையாததால், ஆன்லைனில் வரி வசூலிக்கும் பணி பாதிக்கும் அபாயம்
ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.
இதில், 1,350 குக்கிராமங்களில், பல லட்சம் குடிநீர் இணைப்புகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இதுதவிர, நுாற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் உள்ளன.
ஊராட்சிகளில், வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, உரிமம் வரி ஆகிய வரி இனங்களை ஊராட்சி நிர்வாகங்கள் வசூலிக்கின்றன. வரி இனங்களின் வகைக்கு ஏற்ப, இளஞ்சிவப்பு, பச்சை, மஞ்சள் ஆகிய வெவ்வேறு நிறங்களில் ரசீதுகள் வழங்கப்படுகின்றன.
அறிவுரை
அனைத்து ஊராட்சிகளிலும், 2023 - 24ம் நிதி ஆண்டு முதல், வீட்டு வரி உள்ளிட்ட பல வித வரியினங்களை 'ஆன்லைன்' வாயிலாக வசூலிக்க வேண்டும் என, ஊரக வளர்ச்சித் துறை உத்தரவிட்டு உள்ளது.
இதற்கான வழிகாட்டியை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி அனுப்பியுள்ளார்.
அதன்படி, ஊராட்சி வரி இனங்களின் விபரங்களை, https://sdp.nic.in/vptax/ என்ற இணையதளத்தில், ஊராட்சி செயலர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அந்தந்த மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு செய்து, விரைவாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மார்ச் மாத துவக்க நிலவரப்படி, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணியில், பல்வேறு ஊராட்சிகள் ஆர்வம் காட்டவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, தொழிற்சாலைகள் நிறைந்த ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், வாலாஜாபாத் ஆகிய ஒன்றியங்களில், தொழில்வரி வசூலிக்கும் நபர்களின் எண்ணிக்கை மற்றும் தொழிற்சாலை உரிமம் எண்ணிக்கை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யவில்லை. பதிவேற்றம் பணிகள் சுணக்கமாகவே நடைபெற்று வருகிறது.
வரி இனங்கள் பதிவேற்றம் ஒவ்வொன்றும் குறைவையாகவே உள்ளன.
உதாரணமாக, தொழில் வரி, 182 ஊராட்சிகளிலும், உரிமம் வரி 221 ஊராட்சிகளில் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள ஊராட்சிகளில் இன்னும் பதிவேற்றப்படாமலேயே உள்ளன.
புலம்பல்
ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய, முறையான வழிகாட்டி விபரங்களை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதமே வழங்கிய நிலையில், இன்னும் பணிகள் சுணக்கமாகவே நடப்பதால், நடப்பு நிதி ஆண்டு துவக்கத்தில், ஆன்லைனில் வரிகளை வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என, ஊரக வளர்ச்சித் துறையினர் புலம்பி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஊராட்சிகளில் செலுத்தப்படும் வரி இனங்களை, ஏப்ரல் மாதம் முதல் ஆன்லைனில் செலுத்தும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், குடியிருப்பு, தொழில் வரி, உரிமம் வரியினங்கள் என, தனித்தனியாக பதிவேற்றம் செய்து வருகிறோம்.
பெரும்பாலான குடியிருப்புகளின் எண்ணிக்கை பதிவேற்றம் செய்து முடிக்கப்பட்டு உள்ளது. மீதம் இருக்கும் தொழில் வரி, உரிம வரி ஆகிய வரியினங்களை இம்மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
நிறைவு பெற்ற பின், அனைத்து வித வரியினங்களையும் ஆன்லைனில் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வட்டாரம் மொத்த ஊராட்சிகள் வீட்டு வரி குடிநீர் வரி தொழில் வரி உரிமம் வரிகாஞ்சிபுரம் 40 -10 22 8வாலாஜாபாத் 61 28 31 30 40உத்திரமேரூர் 73 42 45 46/ 73ஸ்ரீபெரும்புதுார் 58/ 58/ 58/ 58/ 58குன்றத்துார் 42 23/ 38 42 42மொத்தம் 274 151 182 198 221