காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், மாநகராட்சி, 22வது வார்டு, திருக்காலிமேடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 'வருமுன் காப்போம்' திட்ட மருத்துவ முகாம் நடந்தது.
காஞ்சிபுரம் தி.மு.க., --- எம்.எல்.ஏ., எழிலரசன் முகாமை துவக்கி வைத்தார். இதில், பொது மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, கண், இருதயம், சிறுநீரகம், பெண்கள், குழந்தை, காச நோய், புற்றுநோய் உள்ளிட்டவைக்கு மருத்துவ நிபுணர்கள் வாயிலாக சிறப்பு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நோயின் தன்மைக்கேற்ப மருந்து, மாத்திரை வழங்கப்பட்டது.
மேலும், சிறுநீரில் சர்க்கரை, உப்பு, ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பின் அளவு, ரத்த வகைப்படுத்துதல் உள்ளிட்ட பரிசோதனை செய்யப்பட்டது.
முகாமில், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, துணை மேயர் குமரகுருநாதன், கமிஷனர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முகாமில் பொது மருத்துவம், சர்க்கரை, ரத்த அழுத்தப் பரிசோதனை மற்றும் பல்வேறு சிகிச்சைக்காக 1,020 பேர் பங்கேற்றனர்.
இதில், கண் அறுவை சிகிச்சைக்கு நான்கு பேரும், காசநோய் சிகிச்சைக்கு ஐந்து பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என, மாநகராட்சி நகர்நல அலுவலர் அருள்மொழி தெரிவித்தார்.