மாமல்லபுரம்: இந்தியாவில் இருசக்கர வாகன பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்திய, சர்வதேச வாகன தயாரிப்பு நிறுவனங்கள், பைக், புல்லட், ஸ்கூட்டர் என, பல வகை வாகனங்களை தயாரிக்கின்றன.
இளைஞர்களை கவரும் வகையில், நவீன தோற்றங்களில் அவை உருவாக்கப்படுகின்றன.
ஒவ்வொரு நிறுவனமும், அதன் புதிய வாகனம், நுகர்வோரை எளிதில் கவரும் வகையில், வாகனத்தின் சிறப்பு அம்சங்கள், செயல் திறன், பயன்பாடு உள்ளிட்டவை குறித்து, பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் விளம்பரப்படுத்தும்.
இது ஒருபுறமிருக்க, நிறுவனங்கள், வாகன விற்பனையை அதிகரிக்க, பல உத்திகளையும் கையாள்கின்றன.
புதிய அறிமுக இருசக்கர வாகனம் வாங்கிய வாடிக்கையாளர்களை ஒருங்கிணைத்து, சென்னை பகுதியிலிருந்து, பிற பகுதிகளுக்கு, புதிய வாகனங்களில் சுற்றுலா பேரணியாக செல்கின்றனர்.
ஒரே நேரத்தில், ஏராளமான வாகனங்கள் சாலையில் அணிவகுப்பதால், நுகர்வோர் கவனம் பெறுகின்றன. சென்னையிலிருந்து மாமல்லபுரத்திற்கு, கிழக்கு கடற்கரை, பழைய மாமல்லபுரம் சாலைகள் வழியே, இத்தகைய நுகர்வோரை கவரும் பேரணி அதிகரித்துஉள்ளது.