ஊத்துக்கோட்டை: ஆரணி அடுத்த, சிறுவாபுரி முருகன் கோவிலில் கடந்தாண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
இங்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து சுவாமியை தரிசனம் செய்வர்.
மேலும், இங்கு நடைபெறும் முக்கிய விழாக்களில், மார்ச் மாதம், மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை லட்சார்ச்சனை நடைபெறுவது வழக்கம்.
இரண்டு ஆண்டுகளாக 'கொரோனா' வைரஸ் தொற்று காரணமாக இவ்விழா நடைபெறவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு பின், நேற்று, இவ்விழா நடந்தது. காலை மூலவருக்கு 18 விதமான அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.
ரத்தினாங்கி சேவையில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதைத் தொடர்ந்து, 18 அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க, லட்சார்ச்சனை நடந்தது.
இதில் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து மஹா தீபாராதனை காட்டப்பட்டது.