கூடுவாஞ்சேரி: நந்திவரம் -- கூடுவாஞ்சேரி நகராட்சி செங்கல்பட்டு நோக்கி செல்லும் ஜி.எஸ்.டி., சாலையில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எட்டு வழிச்சாலை பணிகள் நீண்ட மாதங்களாக நடக்கிறது.
தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை உள்ள ஜி.எஸ்.டி. சாலை எட்டு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி நிறைவு பெறும் தருவாயில், கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரத்தில் சாலையின் இருபுறத்திலும், சாலை பணிகள் மந்த கதியில் நடக்கின்றன.
இதனால், இந்த சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள், பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
குறிப்பாக, இந்த சாலை அருகில் உள்ள 'எஸ்டென்சியா' அடுக்குமாடி குடியிருப்பில் பல தொழில் துறை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு, வணிக வளாகங்கள், பள்ளி, கல்லுாரிகள் அதிகம் உள்ளன. இந்த பகுதியில் பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
மேலும், இங்கு தினந்தோறும் காலை முதல் இரவு வரை அதிகப்படியான வாகனங்கள் வந்து செல்கின்றன.
இந்த இடத்தில் பல மாதங்களாக சாலை பணிகள் மந்த கதியில் நடந்து வருகின்றன. இதனால், இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பல சிரமங்கள் ஏற்படுகின்றன.
எனவே, இந்த சாலை பணிகளை விரைந்து முடித்து, சீரான போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்ய, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.