கூடுவாஞ்சேரி: மறைமலை நகர் நகராட்சி நகராட்சி அலுவலகம் அருகில், மறைமலை அடிகளார் சாலையில், நகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது.
இந்த விளையாட்டு மைதானத்தை, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது, இந்த விளையாட்டு மைதானம், மக்கள் பயன்படுத்த முடியாதபடி, திறந்தவெளி 'குடி' மையமாக செயல்பட்டு வருவதாக, புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த சமூக நல ஆர்வலர் கூறியதாவது:
மறைமலை நகராட்சி, மறைமலை அடிகளார் சாலையில், நகராட்சிக்கு சொந்தமான மிகப்பெரிய விளையாட்டு மைதானம் உள்ளது.
சில மாதங்களாக, இந்த மைதானத்தை சுற்றி, சாலைகளின் ஓரமாக வாகனங்களை நிறுத்திவிட்டு, கும்பலாக அமர்ந்து மதுபானம் குடித்து விட்டு, காலி பாட்டில்கள் மற்றும் குப்பையை மைதானத்திலேயே வீசி செல்கின்றனர்.
இதனால், துர்நாற்றம் ஏற்படுவதோடு, அந்த சாலையில் மாலை 4:00 மணிக்கு மேல், பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியாதபடி, பாதுகாப்பற்ற சூழல் உள்ளது.
மேலும், இது குறித்து, நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குடிமகன்கள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால், இந்த விளையாட்டு திடலை பராமரித்து, சுற்றுச்சுவர் அமைத்து, தனி நபர்கள் உள்ளே செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.