சித்தாமூர்: சித்தாமூர் அருகே நுகும்பல் கிராமத்தில், வெண்ணாங்குப்பட்டு- - மதுராந்தகம் செல்லும் மாநில நெடுஞ்சாலை ஓரத்தில், பேருந்து நிறுத்தம் உள்ளது.
நுகும்பல், போரூர், கூனங்கரணை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
பேருந்து நிறுத்தத்தில், 15 ஆண்டுகளுக்கு முன் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்கப்பட்டது.
கடந்த சில வருடங்களுக்கு முன், நிழற்குடையின் முன் பகுதியை தனிநபர் ஆக்கிரமித்து, இரும்பு சீட் கொண்டு கடை அமைத்து மளிகை கடை நடத்தி வருகிறார்.
இதனால், நிழற்குடையில் காத்திருக்கும் பொது மக்கள், சாலையில் பேருந்து வருவது தெரியாமல், பேருந்தை தவறவிடுகின்றனர். இதனால், தற்போது சாலை ஓரத்திலேயே பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருக்கின்றனர்.
பேருந்து நிறுத்த நிழற்குடையின் முன் பகுதி மறைக்கப்பட்டு உள்ளதால், இரவு நேரங்களில் குடிமகன்கள் அமர்ந்து மது அருந்துவதற்கு வசதியாக உள்ளது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பேருந்து நிறுத்த நிழற்குடை முன் அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிழற்குடையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.