செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில்,
நெடுஞ்சாலைத் துறையினரும், நகராட்சி அதிகாரிகளும் மெத்தனமாக உள்ளனர்.
ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சி பிரமுகர்கள் களமிறங்கியதால்,
அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. நாளுக்கு நாள் அதிகரிக்கும்
ஆக்கிரமிப்புகளால், செங்கல்பட்டு நகர்ப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்
ஏற்படுகிறது.
செங்கல்பட்டு நகரில், மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லுாரி, அரசு சட்டக்கல்லுாரி, அரசு மற்றும் தனியார் பள்ளிகள், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன.
மேலும், தனியார் மருத்துவமனைகள், வங்கிகள், தனியார் துணிக்கடைகள், நகைக்கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன. இதனால், தினமும் ஏராளமான பொதுமக்கள் நகருக்கு வந்து செல்கின்றனர்.
இந்நகரில், பழைய பேருந்து நிலையத்திலிருந்து ராட்டிணங்கிணறு வரை, ஜி.எஸ்.டி., சாலையில், சாலையை ஆக்கிரமித்து கடைகளுக்கு முன் கூரை அமைத்துள்ளனர்.
இதேபோன்று, காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை, ராஜாஜி தெரு, அண்ணா சாலை, பழைய ஜி.எஸ்.டி., சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இந்த சாலைகளில் வாகனங்கள் செல்லும்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சாலை விரிவாக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நகரில், திருமணம் மற்றும் விழாக் காலங்களில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற, சமூக ஆர்வலர்கள், மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.
அதன்பின், ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி நிர்வாகத்திற்கு, மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், கடந்த ஆண்டு உத்தரவிட்டார்.
அதன்பின், வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி நிர்வாகம் இணைந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி, ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை துவக்கினர்.
அதன்பின், ராட்டிணங்கிணறு முதல் சின்னம்மன் கோவில் வரை, ஆக்கிரமிப்புகளை அகற்றம் செய்தனர்.
அப்போது, ஆக்கிரமிப்பாளர்களுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆதரவு தெரிவித்ததால், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.
இப்பணியை மீண்டும் தொடர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர்.
இதனால், தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் கடுமயைாக பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவதற்கு தயாராக உள்ளோம். ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொடுத்தாலும், ஆக்கிரமிப்புகள் வரமால் தடுக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி நிர்வாகம் ஆகியவை ஆக்கிரமிப்பு அகற்றக் கோரினால், நடவடிக்கை எடுக்கப்படும்.
- வருவாய்த் துறை அதிகாரி,
செங்கல்பட்டு.
நகரில், ஜி.எஸ்.டி., சாலை மற்றும் பிற சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாவட்ட கலெக்டரிடம் தகவல் தெரிவிக்கப்படும். கலெக்டர் உத்தரவிட்ட பிறகு, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
- நகராட்சி அதிகாரி, செங்கல்பட்டு.
ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, வருவாய்த் துறை ஒத்துழைப்பு கொடுத்தால், ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மார்ச் மாதம் முடிந்த பிறகு, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபடுவோம்.
- நெடுஞ்சாலைத் துறை அதிகாரி, செங்கல்பட்டு.
செங்கல்பட்டு ராட்டிணங்கிணறு பகுதியில், இரண்டு பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. ஒரு பேருந்து நிறுத்தத்தில் இட வசதியில்லாததால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் சாலையில், விபத்து அச்சத்துடன் நிற்கின்றனர்.விபத்துகளை தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், ஜி.எஸ்.டி., சாலையில், சின்னம்மன் கோவில் அருகில் இருந்த ஆக்கிரமிப்புகள் மட்டும் அகற்றப்பட்டன. இங்கு, பேருந்து நிறுத்தம் அமைக்க இடம் தேர்வு செய்தனர். இப்பணி கிடப்பில் உள்ளது.