மதுராந்தகம்: மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவியை காணவில்லை என, மதுராந்தகம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டதில், மதுராந்தகம் அடுத்த அருங்குணம் பகுதி மீனவர் தெருவை சேர்ந்த கலியுக பெருமாள் மகன் பிரவீன் குமார், 25; சேலம் மாவட்டம், அம்மாபேட்டை பகுதி, பாரதியார் தெருவைச் சேர்ந்த பழனிவேல் மகன் லக்மசுதன், 25, ஆகிய இருவரையும், சேலத்தில் கைது செய்து, மதுராந்தகம் அழைத்து வந்தனர்.
பின், அவர்களிடம் நடத்திய விசாரணையில், நேற்று முன்தினம், பள்ளி மாணவியை அழைத்துக்கொண்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, பள்ளி மாணவியை மீட்ட போலீசார், பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இருவரிடமும், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.